தமிழ்நாட்டில் ஆன்லைன் சூதாட்டத்தினால் பலர் பணத்தை தொடர்ந்து இழந்து வருவதுடன், தற்கொலை உள்ளிட்ட மோசமான முடிவுகளை நோக்கியும் தள்ளப்படுவது தொடர்கதையாக இருந்து வருகிறது. ஆன்லைன் சூதாட்டங்களுக்கு தடை கோரி சட்டமன்றத்தில் நிறைவேற்றிய மசோதா ஆளுனர் ஒப்புதல் அளிக்கப்படாமல் கிடப்பில் உள்ளது. இந்நிலையில் சமீபத்தில் சென்னை தாம்பரம் அருகே ஆன்லைன் சூதாட்டத்தால் ரூ.20 லட்சத்தை இழந்த மருந்து நிறுவன பிரதிநிதி வினோத்குமார் என்பவர் தற்கொலை செய்து கொண்டார். தற்கொலை செய்து கொள்ளும் முன்பு அவர் தனது குடும்பத்திற்கு எழுதி இருந்த உருக்கமான கடிதம் பலரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
இந்நிலையில் சென்னை கே.கே.நகரில் வசித்து வந்த சுரேஷ் என்பவரும் ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்துள்ளார். சுமார் ரூ.16 லட்சத்தை இழந்த அவர் பல இடங்களிலும் கடன் வாங்கியிருந்ததால் கடனை கட்ட முடியாத நிலையில் தற்கொலை செய்துகொள்ளப் போவதாக கடிதம் எழுதி வைத்துவிட்டு மாயமாகியுள்ளார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீஸார் மாயமான சுரேஷை தேடி வருகின்றனர்.