சென்னையின் பழம்பெரும் அடையாளங்களில் ஒன்றாக இருந்த டபுள் டக்கர் பேருந்துகள் விரைவில் மீண்டும் சென்னையில் இயக்கப்பட உள்ளன.
பிரிட்டிஷ் காலம் முதல் தற்போது வரை, செண்ட்ரல் தொடங்கி எல்.ஐ.சி வரை பல தலைமுறை வரலாற்று சின்னங்களை சுமந்து நவீனத்துடன் பொருந்தி நிற்கிறது சென்னை மாநகரம். இந்த சென்னையின் அடையாளங்களில் ஒன்றாக இருந்து வந்தது டபுள் டெக்கர் எனப்படும் மாடிப் பேருந்துகள்.
1970களில் அறிமுகமான இந்த டபுள் டெக்கர் பேருந்துகள் 1997ம் ஆண்டில் பல வழித்தடங்களிலும் திரும்ப பெறப்பட்டது. சாதாரண பேருந்துகள் மட்டுமே இயக்கப்பட்டது. உயர்நீதிமன்றம் முதல் தாம்பரம் வரையிலான வழியில் 18ஏ பேருந்து மட்டும் 2008ம் ஆண்டு வரை டபுள் டெக்கராக இயங்கி வந்தது. பின்னர் அதுவும் திரும்ப பெறப்பட்டது.
அதற்கு பிறகு சுமார் 17 ஆண்டுகள் கழித்து மீண்டும் சென்னையில் வலம் வர உள்ளது டபுள் டக்கர் பேருந்து. ரூ.10 கோடி செலவில் 20 இரட்டை அடுக்கு மின்சாரப் பேருந்துகள் இந்த ஆண்டு இறுதிக்குள் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. சென்னை மெரினா உள்ளிட்ட சுற்றுலா பகுதிகளை மையப்படுத்தி சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் விதமாக 20 பேருந்துகளின் வழித்தடங்கள் நிர்ணயம் செய்யப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
Edit by Prasanth.K