உலகம் முழுவதும் பல ஆயிரம் விமான நிலையங்கள் செயல்பட்டு வரும் நிலையில் கடந்த சில ஆண்டுகளில் கொரோனா காரணமாக விமான சேவைகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. கொரோனா பரவல் கட்டுபாடுகள், கொரோனா அறிகுறிகள் கண்டடைதல் உள்ளிட்ட பல காரணங்களால் உலகம் முழுவதும் பல விமான நிலையங்களில் விமானங்கள் திடீர் ரத்து, குறிப்பிட்ட கால அளவு வரை இயக்க தடை என சிரமங்களை பயணிகளும், விமான நிறுவனங்களும் எதிர்கொள்ள வேண்டியிருந்தது.
இந்நிலையில் கடந்த ஆண்டில் பல்வேறு பிரிவுகளின் கீழ் சிறப்பாக செயல்பட்ட விமான நிலையங்கள் குறித்து சிரியம் என்ற நிறுவனம் கணக்கெடுப்பை மேற்கொண்டுள்ளது. அதில் உலகம் முழுவதும் நேரம் தவறாமல் விமானங்களை இயக்கிய விமான நிலையங்கள் குறித்த தரவரிசையில் சென்னை சர்வதேச விமான நிலையம் 8வது இடத்தில் உள்ளது. சென்னை சர்வதேச விமான நிலையத்தில் 98.32 சதவீதம் சரியான நேரத்திற்கு விமானங்கள் இயக்கப்பட்டதாக கூறப்பட்டுள்ளது. 96.51 சதவீதத்துடன் ஜப்பானின் இட்டாமி விமான நிலையம் முதல் இடத்தில் உள்ளது.