தீர்ப்பை ஒத்திவைத்த நீதிபதி.. கேள்விக்குறியான அதிமுக பொதுக்குழு! – குழப்பத்தில் தொண்டர்கள்!

வெள்ளி, 8 ஜூலை 2022 (17:46 IST)
அதிமுக பொதுக்குழுவுக்கு தடை கோரி ஓபிஎஸ் தொடர்ந்த வழக்கில் தீர்ப்பை நீதிபதி ஒத்தி வைத்துள்ளதால் திட்டமிட்டபடி பொதுக்குழு நடைபெறுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

அதிமுகவில் ஒற்றைத் தலைமை குறித்து ஓபிஎஸ் – ஈபிஎஸ் இடையே மோதல் நிலவி வருகிறது. முன்னதாக நடந்த பொதுக்குழு கூட்டம் சலசலப்பில் முடிந்தது. முன்னதாக நடந்த பொதுக்குழுவில் ஒற்றைத் தலைமை தீர்மானத்தை கொண்டு வர ஈபிஎஸ் தரப்பு முயன்ற நிலையில் ஓபிஎஸ் மற்றும் ஆதரவாளர்கள் வெளியேறினர். 

இந்நிலையில் வரும் திங்கள்கிழமை (11.07.2022) அன்று மீண்டும் பொதுக்குழுவை நடத்த எடப்பாடி பழனிசாமி அணி திட்டமிட்டுள்ளது. இதற்காக சென்னை வானகரத்தில் மேடை அமைக்கப்பட்டு ஏற்பாடுகள் பலமாக நடந்து வருகின்றன. இந்த பொதுக்குழுவை நடத்தக்கூடாது என்று ஓ.பன்னீர்செல்வம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு இன்று பிற்பகல் விசாரணைக்கு வந்த நிலையில் பொதுக்குழு நடத்துவது குறித்தும், பொதுசெயலாளர் தேர்வு குறித்தும் கட்சி நடைமுறை என்ன என்பது குறித்து எடப்பாடி பழனிசாமி தரப்பும், ஓ பன்னீர்செல்வம் தரப்பும் காரசாரமான விவாதங்களை நடத்தினர். சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக வழக்கு விசாரணை நடைபெற்ற நிலையில் இந்த வழக்கின் தீர்ப்பை ஜூலை 11 காலை 9 மணிக்கு அறிவிப்பதாக கூறி தீர்ப்பை நீதிபதி ஒத்திவைத்துள்ளார்.

தீர்ப்பு வெளியாக உள்ள அதே 11ம் தேதிதான் பொதுக்குழு நடத்துவதற்கும் ஏற்பாடுகளை எடப்பாடி பழனிசாமி அணியினர் செய்துள்ளனர். இதனால் பொதுக்குழு நடத்த சாதகமான தீர்ப்பு கிடைக்குமா என்று கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்