காட்டியது ரூ.1 கோடி.. காட்டாமல் மறைத்தது ரூ.58 கோடி! – வசமாக சிக்கிய காமராஜ்!

வெள்ளி, 8 ஜூலை 2022 (13:10 IST)
முன்னாள் அதிமுக அமைச்சர் காமராஜ் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை நடத்திய சோதனையில் வருமானத்திற்கு அதிகமான சொத்துகளை வாங்கி குவித்ததாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

கடந்த 2011ல் அதிமுக ஆட்சி அமைத்தது முதலாக 2021 வரை தமிழ்நாடு அரசின் உணவு மற்றும் குடிமைப் பொருள் வழங்கல் துறை அமைச்சராக பதவி வகித்தவர் மன்னார்குடியை சேர்ந்த காமராஜ். தொடர்ந்து மூன்று முறை நன்னிலம் தொகுதி எம்.எல்.ஏவாக இருந்து வரும் காமராஜ் கடந்த 2015-16ம் ஆண்டில் தற்காலிக அறநிலையத்துறை அமைச்சராகவும் பதவி வகித்தார்.

கடந்த 2015ம் ஆண்டு கணக்கீட்டின்படி முன்னாள் அமைச்சரான காமராஜின் சொத்துமதிப்பு ரூ.1,39,54,290 ஆக கணக்கில் காட்டப்பட்டிருந்தது. இதில் அசையா சொத்துகளான விவசாய நிலங்கள், கட்டிடங்கள் உள்ளிட்டவையும் அடக்கம்.

இந்நிலையில் இன்று முன்னாள் அமைச்சர் காமராஜ் மற்றும் அவருக்கு தொடர்புடைய வீடுகள் மற்றும் அலுவலகங்களில் நடத்திய சோதனையில் வருமானத்திற்கு அதிகமாக ரூ.58 கோடி மதிப்பிலான சொத்துகளை சேர்த்துள்ளது தெரிய வந்துள்ளது.

இதுதொடர்பாக முன்னாள் அமைச்சர் காமராஜ், மருத்துவர்களான அவரது இரண்டு மகன்கள் மற்றும் சொத்துக்குவிப்புக்கு உடந்தையாக இருந்த 3 பேர் உள்பட 6 பேர் மீது சொத்துக்குவிப்பு வழக்கு தொடரப்பட்டுள்ளது. இதில் முதல் குற்றவாளியாக முன்னாள் அமைச்சர் காமராஜ் சேர்க்கப்பட்டுள்ளார். ஏற்கனவே அதிமுக தலைமை குறித்த பிரச்சினை நிலவி வரும் நிலையில் இந்த சம்பவம் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்