இஸ்லாமியர்கள் குறித்து பேசிய எச்.ராஜா மீது வழக்கு பதிவு செய்ய நீதிமன்றம் உத்தரவு!

செவ்வாய், 10 அக்டோபர் 2017 (12:21 IST)
இந்திய தேசிய லீக் கட்சியின் மாநிலத் தலைவர் தடா ஜெ.அப்துல் ரஹீம் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிமன்றம் பாஜக தேசியச் செயலாளர் எச்.ராஜா மீது வழக்கு பதிவு செய்ய சென்னை திருவல்லிக்கேணி காவல்துறை ஆய்வாளருக்கு உத்தரவிட்டுள்ளது.


 
 
கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இந்து முன்னணியை சேர்ந்த பிரமுகர் ஒருவர் ராமநாதபுரத்தில் வெட்டப்பட்டார். இந்த சம்பவத்துக்கு இஸ்லாமியர்கள் தான் காரணம் என எச்.ராஜா பேட்டியளித்தார். மேலும் இது தொடர்பாக அறிக்கையும் வெளியிட்டார்.
 
ஆனால் காவல்துறையினர் இது தொடர்பாக நடத்திய விசாரணையில் இந்த சம்பவத்தில் ஈடுபட்டது இந்து முன்னணியை சேர்ந்தவர்கள் என்பதும், இது சொத்து தகராறில் நடந்த சம்பவம் என்பதும் தெரியவந்தது.
 
இதனையடுத்து இந்திய தேசிய லீக் கட்சியின் மாநிலத் தலைவர் தடா ஜெ.அப்துல் ரஹீம், இரு சமூகத்தினர் இடையே கலவரத்தை ஏற்படுத்தும் விதமாக எச்.ராஜா அவதூறாகப் பேசியுள்ளார். அவர்மீது நடவடிக்கை எடுக்கக்கோரி சென்னை திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
 
ஆனால் அவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்காததால் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்து, எச்.ராஜா மீது வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க காவல்துறைக்கு உத்தரவிட வேண்டும் என கூறியிருந்தார். இதனை விசாரித்த உயர் நீதிமன்றம், எச்.ராஜா மீது வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க சென்னை திருவல்லிக்கேணி காவல்துறை ஆய்வாளருக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்