யாரையும் சந்தித்து பேசக்கூடாது, அரசியல் தொடர்பான நடவடிக்கைகளில் ஈடுபடக்கூடாது என சசிகலாவிற்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. எனவே, முதல்வர் உட்பட தொலைப்பேசியில் சிலரிடம் சசிகலா பேச விரும்பியதாகவும், ஆனால், அவரிடம் பேசுவதை எடப்பாடி பழனிச்சாமி தவிர்த்து வருகிறார் என நேற்று செய்திகள் வெளியானது. அதேபோல், அமைச்சர் ஓ.எஸ்.மணியனிடம் சசிகலாவிடம் தொலைப்பேசியில் பேசியதாகவும் செய்தி வெளியானது.
இந்நிலையில், எடப்பாடி தரப்பின் மீது அதிருப்தியில் உள்ள மூன்று அமைச்சர்கள், சசிகலாவை தி.நகர் வீட்டில் சந்தித்து பேசியுள்ளதாக தெரிகிறது. வழக்காமான வெள்ளை சட்டை, வேஷ்டி இல்லாமல், பேண்ட், சட்டை அணிந்து அவர்கள் வீட்டின் பின்வாசல் வழியாக உள்ளே சென்று சசிகலாவிடம் ஆலோசனை செய்ததாக கூறப்படுகிறது.
உளவுத்துறை மூலம் இதை மோப்பம் பிடித்த எடப்பாடி அவர்களை அழைத்து பேசினாராம். அப்போது, அமைச்சர்களாக இருந்தும், அதிகாரிகள் தங்களை மதிப்பதில்லை, இதுபற்றி உங்களிடம் பலமுறை புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை. எனவேதான், அதனால் விரக்தியடைந்தே சசிகலாவை சந்திக்க சென்றதாக கூறினார்களாம்.
அதையடுத்து, அவர்களின் கோரிக்கைகள் விரைவில் தீர்த்து வைக்கப்படும், அதிகாரிகளிடம் பேசி அனைத்து பிரச்சனைகளும் சரி செய்யப்படும். அவர்கள் பக்கம் செல்ல வேண்டாம் என முதல்வர் தரப்பிலிருந்து கோரிக்கை வைக்கப்பட்டதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது.