இனி ரயில் நிலையங்களில் ஒலிப்பெருக்கி அறிவிப்பு கிடையாதா? – மக்கள் அதிர்ச்சி!

Webdunia
செவ்வாய், 28 பிப்ரவரி 2023 (08:45 IST)
ரயில் நிலையங்களில் ஒலிப்பெருக்கை அறிவிப்பை நிறுத்தும் சோதனை முயற்சியாக சென்னை செண்ட்ரலில் ஒலிப்பெருக்கி அறிவிப்புகள் நிறுத்தப்பட்டுள்ளது.

இந்தியா முழுவதும் உள்ள ரயில் நிலையங்கள் வழியாக ஏராளமான மக்கள் நாள்தோறும் பயணங்கள் மேற்கொள்கின்றனர். ரயில் நிலையங்களில் பல ஆண்டுகளாக ஒலிப்பெருக்கி வழியாக ரயில் வரும் ப்ளாட்பார்ம், நேரம், காலதாமத அறிவிப்பு, பெட்டி எண்கள் என பல விவரங்கள் அறிவிக்கப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் உள்ள ரயில் நிலையங்களில் தமிழ், இந்தி மற்றும் ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளில் தொடர்ந்து இந்த அறிவிப்புகள் வெளியிடப்படுகின்றன. தற்போது ரயில் நிலையங்களில் டிஜிட்டல் அறிவிப்பு பலகைகள் வைக்கப்பட்டிருந்தாலும் படிக்கத் தெரியாதவர்கள், கண் பார்வையற்றவர்களுக்கு இந்த ஒலிப்பெருக்கி அறிவிப்பு பெரிதும் பயனுள்ளதாக இருந்து வந்தது.

இந்நிலையில் அனைத்து ரயில் நிலையங்களிலும் டிஜிட்டல் தகவல் பலகை, உதவி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளதால் ஒலிப்பெருக்கி அறிவிப்பை நீக்கலாம் என ரயில்வே முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. ‘அமைதி ரயில் நிலையம்’ என்ற பெயரில் சோதனை முயற்சியாக சென்னை செண்ட்ரல் ரயில் நிலையத்தில் ஒலிப்பெருக்கி அறிவிப்பு நிறுத்தப்பட்டுள்ளது. அங்கு ஆங்காங்கே டிஜிட்டல் தகவல் பலகைகள் பெரிய அளவில் பொருத்தப்பட்டுள்ளன. கண் பார்வையற்றவர்களுக்கு முகப்பு பகுதியில் ப்ரெய்லி மேப் வைக்கப்பட்டுள்ளது.

இருப்பினும் டிஜிட்டல் பலகைகளை தேடி சென்று ரயில் தகவல்களை பார்ப்பதை விட ஒலிப்பெருக்கி அறிவிப்பில் கேட்டுக் கொள்வது எளிதாக இருந்ததாக சிலர் கருத்து தெரிவித்துள்ளனர். உதாரணத்திற்கு ஒரு ரயில் தாமதமாக வருகிறது அல்லது முன்னதாக சொல்லப்பட்ட ப்ளாட்பார்மிற்கு பதிலாக வேறு ப்ளாட்பார்மில் வருகிறது என்றால் ஒலிப்பெருக்கி அறிவிப்பில் அனைவருக்கும் தெரிந்துவிடும், தகவல் பலகையில் பார்ப்பதாக இருந்தால் எல்லாருக்கும் அந்த தகவல் போய் சேருமா என்பது சந்தேகமே என சில பயணிகள் தெரிவித்துள்ளனர்.

பரிசோதனை முயற்சியாகவே இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் பயணிகளின் ஆதரவை பொறுத்தே தொடரும் என கூறப்படுவதால் இது எந்த அளவு பயனுள்ள திட்டமாக அமைய போகிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்