பேருந்துகளில் டிக்கெட் மூலமாக வசூலிக்கப்படும் தொகைக்கு ஓட்டுனர்கள், நடத்துனர்களுக்கு போக்குவரத்து கழகம் இலக்கை நிர்ணயித்துள்ளது.
தமிழகத்தில் 8 போக்குவரத்து கழகங்களில் சுமார் 1.25 லட்சம் ஊழியர்கள் பணியாற்றி வரும் நிலையில் சமீபத்தில் ஊழியர்கள் கோரிக்கையை ஏற்று 14வது ஊதிய ஒப்பந்தம் கையெழுத்தானது. இதனால் மாநகர போக்குவரத்திற்கான மாத தேவை 10 கோடியாக உயர்ந்துள்ளது.
இந்நிலையில் பேருந்துகளில் வருமானத்தை அதிகரிக்க அரசு பேருந்து நடத்துனர்கள் மற்றும் ஊழியர்களுக்கு போக்குவரத்து கழகம் இலக்கு நிர்ணயித்துள்ளது. சென்னை மாநகர போக்குவரத்து கழகத்திற்கு விளம்பரங்கள் மூலமாக 3.40 கோடி வருவாய் கிடைக்கிறது.
இந்நிலையில் மீதம் 6.60 கோடியை பேருந்து நடத்துனர்கள் மற்றும் ஓட்டுனர்கள் டிக்கெட் வசூல் மூலமாக பூர்த்தி செய்ய வேண்டியுள்ளது. இதனால் பேருந்துகளில் முழு அளவில் பயணிகளை நிரப்பி டிக்கெட் வசூலை அதிகரிக்க வேண்டும் என அனைத்து மண்டல மேலாளர்களுக்கும் சென்னை மாநகர போக்குவரத்து கழகம் உத்தரவிட்டுள்ளது.
ஆனால் பேருந்துகளில் பெண்கள், மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்டவர்களுக்கு இலவசம் என உள்ள அறிவிப்பால் அதிகம் பெண்கள் பயணிக்கும் நிலை உள்ளது. இந்த இலவச அறிவிப்புகளுக்கு நடுவே எப்படி டிக்கெட் வசூலை உயர்த்துவது என்று பேருந்து ஊழியர்கள் குழப்பத்தில் உள்ளதாகவும் பேசிக் கொள்ளப்படுகிறது.