ரூ.570 கோடி விவகாரம் ; கண்டெய்னர் லாரிகளின் பதிவெண்கள் போலி : சிபிஐ வழக்குப்பதிவு

Webdunia
திங்கள், 8 ஆகஸ்ட் 2016 (17:41 IST)
திடீர் திருப்பமாக, தமிழக சட்டசபை தேர்தலுக்கு முன்பு திருப்பூரில் பிடிபட்ட ரூ.570 கோடி தொடர்பாக சிபிஐ வழக்குப்பதிவு செய்துள்ளது.


 

 
கடந்த சட்டமன்ற தேர்தலின் போது திருப்பூர் அருகே 3 கண்டெய்னர் லாரிகளில் இருந்து ரூ.570 கோடி தேர்தல் பறக்கும் படையினரால் கைப்பற்றப்பட்டது. இது தமிழகத்தில் மட்டுமில்லாமல் இந்திய அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
 
ரூ.570 கோடி பணம் கைப்பற்றப்பட்டு சில நாட்களுக்கு பின்னரே எஸ்பிஐ வங்கி அந்த பணம் தங்களுடையது என உரிமை கோரியது. ஐதராபாத்தில் உள்ள ஸ்டேட் வங்கிக்கு எடுத்துச் செல்லப்பட்டதாக கூறப்பட்டது. 
 
ஆனால், இவ்வளவு பணத்தை எடுத்து செல்லும்போது சரியான நடைமுறைகள் பின்பற்றப்படவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது. மேலும், இதுகுறித்து சிபிஐ விசாரனை செய்யப்பட வேண்டும் என்று திமுகவின் செய்தி தொடர்புத்துறை செயலாளர் டிகேஎஸ் இளங்கோவன், சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார். அந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், இந்த வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும் என்று தீர்ப்பு வழங்கியது.
 
அதன்பின் விசாரணையில் இறங்கிய சிபிஐ, முதல் கட்ட விசாரணைக்குப்பின் தற்போது வழக்குப் பதிவு செய்துள்ளது. முக்கியமாக, பணத்தை கொண்டு சென்ற 3 கண்டெய்னர் லாரிகளின் பதிவெண்களும் போலி என்பது தற்போது தெரியவந்துள்ளது.
 
சிபிஐ விசாரணையில், இந்த வழக்கு சூடுபிடித்துள்ளது. இதில் பல அதிகாரிகள் சிக்குவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 
அடுத்த கட்டுரையில்