கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்து செல்ல முயற்சித்த அருப்புக்கோட்டை கல்லூரி ஒன்றின் கணித பேராசிரியை நிர்மலாதேவி வழக்கை கவர்னர் நியமனம் செய்த சந்தானம் தலைமையிலான குழுவும், சிபிசிஐடியும் தனித்தனியே விசாரணை செய்து வருகின்றனர்.
இந்த விவகாரத்தில் பேராசிரியை நிர்மலாதேவிக்கு துணை பேராசிரியர் முருகனை போலீசார் கைது செய்தனர். அதேபோல், இதில் தொடர்புடைய ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி சமீபத்தில் மதுரை மாவட்ட குற்றவியல் நீதிமன்றத்தில் சரணடைந்தார் எனவே, நிர்மலா தேவி, முருகன், கருப்பசாமி ஆகிய மூவரிடமும் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தொடக்கத்தில் போலீசாரின் விசாரணைக்கு முருகன் சரியான ஒத்துழைப்பு அளிக்கவில்லையாம். நிர்மலா தேவியிடம் அவர் செல்போனில் அடிக்கடி பேசியதற்கான ஆதாரங்களை காட்டிய பின் வாய் திறந்து பேசியுள்ளார். அப்போது பல்கலைக்கழக அதிகாரிகள் பலருக்கும் இதில் தொடர்பு இருப்பதாக அவர் தெரிவித்தாராம். அவரை 10 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் திட்டமிட்டனர். ஆனால், நீதிமன்றம் 5 அனுமதி அளித்தது.
இந்நிலையில், போலீசாரின் விசாரணையில் நிர்மலாதேவி, முருகன், கருப்பசாமி ஆகியோர் ஒரு சில தகவல்களை கூறினாலும், இதில் தொடர்புடைய முக்கிய விவிஐபிக்களின் பெயரை கூற மறுக்கிறார்களாம். அதாவது, யாருக்காக இதை செய்தார்கள் என்கிற முக்கிய தகவலை போலீசாரால் பெற முடியவில்லை எனத் தெரிகிறது.
இதனால், விசாரணையில் தேக்க நிலை ஏற்பட்டுள்ளதாக சிபிசிஐடி போலீசார் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், 4வது நாட்களாக போலீசார் அவர்களிடம் தொடர்ந்து விசாரணை செய்து வருகின்றனர்.