File Photo
கடலூர் மாவட்டத்தில் மலையடிக்குப்பம், வெ. பொத்தாங்குப்பம், கொடுக்கன்பாளையம், கீரப்பாளையம் ஆகிய கிராமங்களில் 5 தலைமுறைகளாக அரசு தரிசு நிலத்தில் முந்திரி பயிர் செய்து வரும் விவசாயிகளை சட்டவிரோத ஆக்கிரமிப்பாளர்கள் எனக் கூறி 9,000 மரங்களை வேரோடு பிடுங்கி எறியப் பார்ப்பது மிகுந்த அதிர்ச்சியையும் மன வேதனையையும் அளிக்கிறது என தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:
விவசாயிகள் தங்கள் பிள்ளை போல் கண்ணுங்கருத்துமாக கவனித்த மரங்களைத் தோல் தொழிற்சாலை அமைப்பதற்காக வெட்டுவது அநியாயம் இல்லையா? கிட்டத்தட்ட 200 ஆண்டுகளாக விவசாயிகள் அந்த நிலத்தைப் பயன்படுத்தி வரும் நிலையில், விவசாயிகளுக்கு பட்டா வழங்குவது உழவர் நலனா? அல்லது பிடுங்கி எறிவது உழவர் நலனா?
தொடர்ந்து மாம்பழ விவசாயிகள், முந்திரி விவசாயிகள் என அனைத்து தரப்பட்ட வேளாண் குடிகளையும் வதைத்துவிட்டு, "நான் டெல்டாக்காரன்" என்று முழங்குவது முறையா என்பதை மாண்புமிகு முதல்வர் திரு. முக ஸ்டாலின் அவர்கள் சிந்திக்க வேண்டும். இனியும் காலந்தாழ்த்தாது முந்திரி விவசாயிகளுக்கு பட்டா வழங்கி அவர்களின் மரங்களைக் காத்து வாழ்வாதாரத்தைக் காக்க வேண்டும்!