ஏராளமான போட்டிகள்.. இலவச பயிற்சிகள்.. கண்காட்சிகள்! களைகட்டும் நாகப்பட்டிணம் புத்தகத் திருவிழா!

Prasanth K

வெள்ளி, 25 ஜூலை 2025 (10:08 IST)

நாகப்பட்டிணத்தில் நான்காவது ஆண்டு புத்தகத் திருவிழா தொடங்க உள்ள நிலையில் அதனுடன் ஏராளமான போட்டிகள், கலைக் கண்காட்சிகளை இணைத்து உண்மையான திருவிழா அளவிற்கே பிரம்மாண்டம் செய்துள்ளனர்.

 

திமுக ஆட்சி அமைந்தது முதலாக அனைத்து மாவட்டங்களில் புத்தகக் கண்காட்சிகளை நடத்த முடிவெடுக்கப்பட்டு ஆண்டு முழுவதும் ஒவ்வொரு வார அளவில் வெவ்வேறு மாவட்டங்களில் புத்தகத் திருவிழா நடந்து வருகிறது. பொதுவாக புத்தகத் திருவிழா என்றாலே சென்னை புத்தகத் திருவிழா, ஈரோடு, மதுரை, கோவை புத்தகத் திருவிழாக்கள் அதிகமான மக்கள் வருகை தரும் விழாக்களாக அமைகின்றன.

 

தற்போது பிற மாவட்டங்களும் அதற்கு நிகராக மக்களை ஈர்க்கும் வண்ணம் புத்தக விழாக்களை சிறப்பாக நடத்தி வருகின்றனர். அவ்வகையில் நாகப்பட்டிணத்தில் 4வது ஆண்டாக நடக்க உள்ள புத்தகத் திருவிழா உண்மையாகவே ஒரு திருவிழா அளவிற்கு ஏற்பாடாகி வருகிறது. 

 

ஆகஸ்டு 1 தொடங்கி 11ம் தேதி வரை நடைபெற உள்ள இந்த புத்தகத் திருவிழாவில் புத்தக விற்பனை மட்டுமல்லாமல் பல்வேறு போட்டிகளும், பயிற்சி பட்டறைகளும் கூட நடைபெற உள்ளது. அவ்வகையில்,

ஆகஸ்டு 1 - பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான விழிப்புணர்வு மற்றும் தற்காப்பு பயிற்சி

ஆகஸ்டு 2 - ஆண்கள் மற்றும் பெண்களுக்கான பளு தூக்குதல் போட்டி

ஆகஸ்டு 3 - ஆண்களுக்கான வலு தூக்குதல் மற்றும் உடற்கட்டமைப்பு போட்டி

ஆகியவை நடைபெறுகின்றன.

 

அதுமட்டுமல்லாமல் தினம்தோறும், மரபுசார் விதை நெல் கண்காட்சி, இசைக்கருவி கண்காட்சி, ஓவியக் கண்காட்சி, நாகை வாழ்வியல் புகைப்பட கண்காட்சி, கோளரங்கம் மற்றும் அறிவியல் கண்காட்சி, பழமையான கார்களின் கண்காட்சி உள்ளிட்ட பல கண்காட்சிகள் நடைபெறுகிறது.

 

இதுதவிர பெரியவர்கள், சிறுவர்கள் என அனைவருக்கும் கலைப்பயிற்சி, ஓவிய பயிற்சி, மணற்சிற்பங்கள் பயிற்சி ஆகியவையும் வழங்கப்படுகின்றன. மொத்தமாக குழந்தைகள், பெரியவர்கள் என அனைவருக்கும் பயனுள்ள வகையில் இந்த திருவிழாவை ஏற்பாடு செய்துள்ளனர்.

 

Edit by Prasanth.K

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்