அத்திக்கடவு-அவிநாசி திட்டம்: அறிவித்த போராட்டத்தை கைவிடப்படுகிறது பாஜக.. என்ன காரணம்?

Mahendran

வெள்ளி, 16 ஆகஸ்ட் 2024 (14:40 IST)
பாஜக அறிவித்த அத்திக்கடவு-அவிநாசி திட்ட போராட்டம் கைவிடப்படுவதாக கட்சியின் தலைவர் அண்ணாமலை அறிவித்துள்ளார்.
 
அத்திக்கடவு-அவிநாசி  திட்டத்தை ஆகஸ்ட் 17ஆம் தேதி தொடங்கி வைக்கப் போவதாக தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் அறிவித்துள்ளதை அடுத்து இந்த போராட்டம் கைவிடப்படுவதாக அண்ணாமலை தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியிருப்பதாவது:
 
ஒரு வழியாக, அத்திக்கடவு – அவிநாசி திட்டத்தை ஆகஸ்ட் 17 அன்று, தமிழக முதலமைச்சர் திரு. ஸ்டாலின் அவர்கள் தொடங்கி வைக்கப் போவதாக அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. ஆட்சிக்கு வந்து கடந்த 39 மாதங்களாக, பொதுமக்கள் மற்றும் விவசாயப் பெருமக்கள் கோரிக்கைகளைக் கண்டுகொள்ளாமல், இந்தத் திட்டத்தை நடைமுறைப்படுத்தக் காலதாமதமாக்கிக் கொண்டிருந்த திமுக அரசு, ஆகஸ்ட் 20 முதல், தமிழக பாஜக சார்பாக, தொடர் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும் என்று அறிவித்ததை அடுத்துப் பணிந்திருக்கிறது. பொதுமக்களின் 70 ஆண்டு காலக் கனவு, தமிழக பாஜகவின் வலியுறுத்தலின் பேரில் நிறைவேறவிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. திமுக அரசின் இந்த அறிவிப்பை வரவேற்கிறோம். 
 
அத்திக்கடவு – அவிநாசி திட்டம் மூலம், கோவை, ஈரோடு, திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் உள்ள ஆயிரத்துக்கும் அதிகமான நீர்நிலைகள், பல ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பலனடைவதோடு, லட்சக்கணக்கான பொதுமக்களின் குடிநீர் தேவையும் பூர்த்தி செய்யப்படும். கடந்த 39 மாதங்களாகத் தாமதப்படுத்தியதற்கு, பொதுமக்களிடம் வருத்தம் தெரிவிக்கத் திமுக அரசு கடமைப்பட்டுள்ளது என்பதையும், இந்தத் தருணத்தில் சுட்டிக் காட்ட விரும்புகிறோம். 
 
மேலும், அத்திக்கடவு – அவிநாசி திட்டத்திற்காக, குழாய் பதிக்க நிலம் கொடுத்த விவசாயிகளுக்கான இழப்பீடு நிதி இதுவரையிலும் வழங்கவில்லை. அவர்களுக்கான இழப்பீடு, திட்டத்தின் தொடக்க விழா அன்றே அறிவிக்கப்பட வேண்டும். ஏற்கனவே இழப்பீடு வழங்கப்படாமல், பல ஆண்டுகள் காலதாமதமாகியிருக்கிறது. திட்டம் நிறைவேறுவது, அவர்களுக்கு ஒரு புறம் மகிழ்ச்சியளித்தாலும், அவர்களுக்கான இழப்பீடும் வழங்கப்படுவதே, அந்த மகிழ்ச்சியை முழுமையானதாக்கும். எனவே, குழாய் பதிக்க நிலம் கொடுத்த விவசாயிகளுக்கான இழப்பீடும், உடனடியாக அறிவிக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.
 
அது மட்டுமின்றி, மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்கள் தலைமையிலான மத்திய அரசு, கடந்த 2021 ஆம் ஆண்டு கொண்டு வந்த தேசிய அணைகள் பாதுகாப்புச் சட்டம், ஒவ்வொரு மாநிலமும், அணைகள் பாதுகாப்புக் குழுவை உருவாக்க வேண்டும் என்று கூறுகிறது. தமிழகத்தில்,  பவானிசாகர், ஆழியாறு, திருமூர்த்தி அணை, அமராவதி அணை உள்ளிட்ட பல்வேறு அணைகள், போதிய பராமரிப்பின்றி இருக்கின்றன. அணைகளைப் பராமரிப்பதும், பாதுகாத்துக் கண்காணிப்பதும்தான் இந்தக் குழுவின் தலையாய பணி. ஆனால், தேசிய அணைகள் பாதுகாப்புச் சட்டம் இயற்றி மூன்று ஆண்டுகள் கடந்தும், திமுக அரசு, இதுவரை, தமிழக அணைகள் பாதுகாப்புக் குழுவை அமைக்கவில்லை. இனியும் தாமதிக்காமல், தமிழக அணைகள் பாதுகாப்புக் குழுவை அமைக்க முதலமைச்சர் திரு. ஸ்டாலின் முன்வர வேண்டும். இதன் மூலம், தமிழக அணைகள் உறுதியாகவும், பாதுகாப்பாகவும் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தக் கடமைப்பட்டுள்ளோம்.
 
அத்திக்கடவு – அவிநாசி திட்டத்தை நிறைவேற்றத் தவறினால், வரும் ஆகஸ்ட் 20 முதல், தமிழக பாஜக சார்பில், தொடர் போராட்டம் நடைபெறும் என்று அறிவித்திருந்தோம். தற்போது, ஆகஸ்ட் 17 அன்று, திட்டத்தைத் தொடங்கி வைப்பதாகத் தமிழக அரசு அறிவித்திருக்கிறது. எங்கள் முக்கியக் கோரிக்கை நிறைவேறியிருப்பதால், தமிழக பாஜக சார்பில் அறிவிக்கப்பட்ட போராட்டம் கைவிடப்படுகிறது. எனினும், விவசாயிகளுக்கான இழப்பீடு வழங்கப்பட வேண்டும் மற்றும், தமிழக அணைகள் பாதுகாப்புக் குழு அமைக்கப்பட வேண்டும் ஆகிய இரண்டு கோரிக்கைகளும் நிறைவேற்றப்படும் வரையில், தமிழக பாஜக தொடர்ந்து குரல் கொடுக்கும் என்பதனையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்