சென்னையில் பணக்கார இளைஞர்களின் பொழுதுபோக்கு விளையாட்டான பைக் ரேஸ், அப்பாவி பொதுமக்களுக்கு எமனாக மாறிவிடுகிறது. சமீபத்தில் கூட சென்னை மெரீனா அருகே பைக் ரேஸில் ஈடுபட்ட இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர்.
இந்த நிலையில் வரும் புத்தாண்டு தினத்திலும் பைக் ரேஸில் ஈடுபடுபவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என காவல்துறைக்கு தகவல்கள் வெளிவந்துள்ளது. இதனால் சென்னை காவல்துறை அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
இதன்படி இனிமேல் பைக் ரேஸில் ஈடுபடுபவர்களுக்கு பாஸ்போர்ட்டுக்கான தடையில்லா சான்றிதழ் வழங்கப்படாது என்றும் அவர்கள் மீது கடும் நடவடிக்கைகள் பாயும் என்றும் சென்னைப் போக்குவரத்துக் காவல்துறை கூடுதல் ஆணையர் அருண் எச்சரித்துள்ளார்.
மேலும் வரும் 31ஆம் தேதி இரவு முதல் சென்னையின் முக்கிய இடங்களில் இரவு 9 மணிக்கு மேல் போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கத்திப்பாரா, அண்ணா மேம்பாலங்கள் தவிர மற்ற மேம்பாலங்கள் அனைத்தும் இரவு11.30 மணி முதல் 1 மணி வரையில் போக்குவரத்துக்கு தடை செய்யப்படும் என்றும் குயின்மேரி கல்லூரி வளாகம், பிரசிடென்சி கல்லூரி,சுவாமி சிவனாந்த சாலை, சேப்பாக்கம் ரெயில் நிலையம், லயால்ட்ஸ் ரோடு உள்ளிட்ட மெரினாவில் 8 இடங்களில் வாகனப் போக்குவரத்து நிறுத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.