சின்னதாக ஏதாவது பிரச்சனை நடந்தாலே அதை அரசியல்வாதிகள் பெரிதாக்கி குளிர் காய்வார்கள். தற்போது வைரமுத்து மற்றும் சங்கராச்சாரியர் பிரச்சனை ஏற்பட்டுள்ளதால் சும்மா இருப்பார்களா? திடீரென தமிழ்ப்பற்று பொங்கி எழுந்து வீராவேசமாக அறிக்கை விட்டு கொண்டிருக்கின்றனர். அரசியல்வாதிகள் மட்டுமின்றி தற்போது படம் இல்லாமல் சும்மா இருக்கும் திரையுலகினர்களும் தங்களுடைய தமிழ்ப்பாசத்தை காட்டி வருகின்றனர்.
இந்த நிலையில் இயக்குனர் இம்யம் பாரதிராஜா காஞ்சி விஜயேந்திரர் குறித்த சர்ச்சைக்கு ஆடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: “தமிழ் மொழியும், தமிழ் இனமும் எங்கே நிற்கிறது? எங்கே போய்க்கொண்டிருக்கிறது? சிந்திக்க வேண்டிய சூழலில் ஒவ்வோரு தமிழனும் இருக்கிறான். கேரளம் கேரளாவாக இருக்கிறது. கர்நாடகம் கர்நாடகாவாக இருக்கிறது. ஆனால் தமிழ்நாடு மட்டும் தான் இந்தியாவாக இருக்கிறது. தமிழகம் தற்போது பல்வேறு பிரச்னைகளை சந்தித்து வருகிறது. சொல்லும் கருத்துக்குத் தடை, எழுதும் எழுத்துக்குத் தடை, பேசும் பேச்சுக்கு தடை, வாழுகின்ற வாழ்க்கைக்கே தடை! என்று தமிழன் தன் தாய் மண்ணிலே அகதிகளாக வாழும் ஒரு அவலம் இங்கு அரங்கேறிக்கொண்டிருக்கிறது. ஆண்டாளைப்பற்றி பேசிய கவிஞன் வைரமுத்துவை அநாகரீகமாக பேசிய மதவாதிகளே! கொஞ்சம் யோசியுங்கள். இன்று தமிழுக்கே தலைகுனிவு ஏற்பட்டுள்ளது. குரல் கொடுப்பீர்களா?
செம்மொழியான தமிழ் மொழியை ஒரு மூத்த மடாதிபதி அவமானப்படுத்தியிருக்கிறார். தமிழர்களே உங்கள் ரத்தம் கொதிக்கவில்லையா? வாழ்வது தமிழ் மண். சுவாமிப்பது தமிழ்க் காற்று. சாப்பிடுவது தமிழ்ச்சோறு. ஆனால் தமிழ்த்தாய் வாழ்த்துக்கு மரியாதை செய்ய மாட்டேனென்று, தேசிய கீதத்திற்கு மட்டும் தான் மரியாதை செய்வேனென்று எழுந்து நின்ற மடாதிபதியை நாம் மன்னிக்கலமா? அறிவார்ந்த தமிழ்க்கூட்டமே! நம் முதுகின் மீது ஏறி சாவாரி செய்கிறது ஒரு கூட்டம். நீ விழிக்கவில்லை என்றால்! உன் உயிரையும், உன் மொழியையும் அழித்து, இனத்தையும் அழித்து வாழும் இந்த ஒரு கூட்டம். இந்த இழி நிலை ஆந்திரா, கர்நாடகத்தில் நடந்தால் நிலைமையே வேறு. எந்தத் தமிழனாவது சமஸ்கிருத மொழியை அவமானப்படுத்தியிருக்கிறானா? இல்லை.”