திருமண நிகழ்ச்சிகளில் உணவுகள் பரிமாறும் போது, சில்வர் டம்ளர்களில் தண்ணீர் வைக்கும் வழக்கத்திற்கு பதிலாக தற்போது பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டில்கள் வைப்பது வழக்கமாகிவிட்டது. இது குறித்த வழக்கு ஒன்று கேரள உயர்நீதிமன்றத்தில் பதிவு செய்யப்பட்ட நிலையில், திருமண வரவேற்பு விருந்து போன்ற முக்கிய நிகழ்வுகளில் பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டில்கள் வழங்குவதை தவிர்க்க வேண்டும் என்றும், அதற்கு பதிலாக கண்ணாடி டம்ளர்களை பயன்படுத்தலாம் என்றும் நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.
மறுசுழற்சி செய்ய முடியாத பிளாஸ்டிக் பொருட்களை ஒழிக்க, இது போன்ற நடவடிக்கைகள் கண்டிப்பாக தேவை என்றும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். நூற்றுக்கணக்கிலும் ஆயிரக்கணக்கிலும் மக்கள் கலந்து கொள்வது போன்ற நிகழ்ச்சிகளில் பிளாஸ்டிக் பயன்படுத்த அரசு அமைப்பிடம் லைசென்ஸ் பெறும் முறையை கொண்டு வரலாம் என்றும் அவர்கள் குறிப்பிட்டனர்.
மேலும், மலைப்பிரதேசங்களில் பிளாஸ்டிக் அதிகம் பயன்படுத்தப்படுவதால் இயற்கை அழிந்து வருவதை ஏற்க முடியாது என்றும், ரயில்வே துறையும் பிளாஸ்டிக் கழிவுகளில் பொறுப்பில்லாமல் செயல்படுகிறது என்றும் நீதிபதிகள் கண்டனம் தெரிவித்துள்ளனர். தண்டவாளங்களை சுத்தமாக வைத்திருப்பது ரயில்வே துறையின் பொறுப்பு என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.