நாக்பூரில் உள்ள மவுண்ட் ரோடில் செயல்படும் ஒரு வங்கியில், மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனா கட்சியினர் புகுந்து வங்கி ஊழியர்களை தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடன் வாங்கிய ஒருவரின் வாகனத்தை, அவருக்கு தெரிவிக்காமல் வங்கி பறிமுதல் செய்து ஏலம் விட்டதாகக்குற்றம்சாட்டி, இந்த தாக்குதல் நடந்துள்ளது.
இந்திரஜித் முலே என்பவர் வங்கியில் கடன் பெற்று ஒரு 'ஜேசிபி' இயந்திரத்தை வாங்கியுள்ளார். அவர் கடனை திருப்பிச் செலுத்த தவறியதால், அவருக்கு எந்தவித தகவலும் அளிக்காமல் அந்த இயந்திரத்தை வங்கி பறிமுதல் செய்து ஏலம் விட்டுள்ளது.
இதனால் கோபமடைந்த மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனா கட்சியினர், வங்கியில் புகுந்து ஊழியர்களை தாக்கினர். இந்த சம்பவம் தொடர்பான வீடியோ, சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.அந்த வீடியோவில், கட்சி தொண்டர்கள் வங்கி வளாகத்திற்குள் நுழைந்து, ஒரு ஊழியரை அடித்து, கன்னத்தில் அறைந்து தாக்குவது பதிவாகியுள்ளது. அவர்கள் மராத்தியில் கோஷங்களை எழுப்பியும், தவறான வார்த்தைகளைப் பயன்படுத்தியும் தங்கள் எதிர்ப்பைப் பதிவு செய்தனர்.
இந்தத் தாக்குதலை தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்தனர். நகரத் தலைவர் சந்து லாடே தலைமையில் சுமார் 50 மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனா கட்சியினர் இந்த போராட்டத்தில் ஈடுபட்டனர். பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர் இந்திரஜித் முலேவும் இந்த சம்பவத்தின்போது உடன் இருந்தார். அவர்கள் வங்கி மேலாளரையும் தாக்கியதுடன், வங்கியின் பெயர் பலகையிலும் மை பூசி அவமதித்தனர்.
ஏற்கனவே மராத்தியில் பேசாததற்காக வங்கி ஊழியர்களை மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனா கட்சியினர் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் தற்போது, இந்த புதிய தாக்குதல் மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.