சினிமாவை மிஞ்சும் பயங்கரம் - மணல் கடத்திய லாரியை விரட்டி சென்ற எஸ்.ஐ. சிறை பிடிப்பு

Webdunia
திங்கள், 18 ஜூலை 2016 (23:36 IST)
வேலூர் சத்துவாச்சாரி காவல் நிலைய ஆய்வாளர் பாண்டி நள்ளிரவு சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளார். அப்போது வேகமாக வந்த மணல் ஏற்றிய லாரி ஒன்றினை மடக்கியுள்ளார். லாரி நிற்காமல் சென்றுள்ளது.
 

 
அந்த லாரி பெருமுகை அருகில் உள்ள பிள்ளையார் குப்பத்தில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரி வளாகம் ஒன்றில் புகுந்துள்ளது. ஆய்வாளர் பாண்டி தனது ஜீப்பில் லாரியை விரட்டிச் சென்றார். ஆனால், கல்லூரி காவலர்கள் காவல் ஆய்வாளர் பாண்டியின் ஜீப்பை தடுத்து நிறுத்தினர்.
 
அதற்குள் லாரியை கல்லூரி வளாகத்துக்குள் நிறுத்தி விட்டு ஓட்டுநர் தப்பி ஓடிவிட்டார். கல்லூரி நிர்வாகி வந்து ஆய்வாளருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். இதற்கிடையே, கல்லூரி நிர்வாகியின் ஆட்கள் காவல் ஆய்வாளர் பாண்டியை சுற்றி வளைத்து தாக்கியதாகவும் அவரை நகரவிடாமல் சிறை பிடித்தாகவும் கூறப்படுகிறது. அவருடன் சென்ற காவல் ஓட்டுநரையும் சிறை வைத்தனர்.
 
அவர்கள் பிடியில் இருந்து நகர்ந்து ஜீப் அருகே வந்தபாண்டி வாக்கி டாக்கியில் பேசினார். என்னைத் தனியார் கல்லூரியில் தாக்கி சிறை வைத்துள்ளனர். என்னை காப்பாற்றுங்கள் எனக் கெஞ்சியுள்ளார். இதனைக் கேட்டு வேலூர் மாவட்ட காவல்துறையினர் அதிர்ச்சி அடைந்தனர்.
 
டி.எஸ்.பி. பன்னீர் செல்வம் மற்றும் ஆயுதப்படை காவலர்கள் 100 பேர் சம்பவ இடத்துக்குச் சென்று ஆய்வாளர் பாண்டியை மீட்டனர். டி.எஸ்.பி. பன்னீர் செல்வம் நடந்த சம்பவம் பற்றி பின்னர் விசாரித்து கொள்வோம். உடனே புறப்படுங்கள் என பாண்டியிடம் கூறியுள்ளார்.
 
ஆனால் அவர், ’நான் விரட்டி வந்த லாரி இங்கே நிற்கிறது. அதனைப் பறிமுதல் செய்யுங்கள். கல்லூரி நிர்வாகியான அதிமுக பிரமுகர் ஜி.ஜி. ரவியை உடனே கைது செய்ய வேண்டும். இல்லையெனில் இங்கேயே தற்கொலை செய்வேன்’ எனவும் பாண்டி கூறியுள்ளார்.
 
இதனையடுத்து கல்லூரி நிர்வாகி காவல் ஜீப்பில் ஏற்றி செல்லப்பட்டார். தாக்குதலில் காயமடைந்த ஆய்வாளர் பாண்டி வேலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். சினிமாவில் வருவது போன்று நடந்த இந்தச் சம்பவத்தால் வேலூர் மாவட்ட காவல்துறையினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
அடுத்த கட்டுரையில்