இரவில் மின்சாரத்தை நிறுத்திவிட்டு பணப் பட்டுவாடா - விஜயகாந்த் குற்றச்சாட்டு

Webdunia
வெள்ளி, 13 மே 2016 (16:03 IST)
இரவு நேரத்தில் மின்சாரத்தை நிறுத்தி விட்டு, அ.தி.மு.க., தி.மு.க. ஆகிய இரு கட்சியினரும் வாக்காளர்களுக்கு பணப் பட்டுவாடா செய்து வருகின்றனர் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார்.
 

 
உளுந்தூர்பேட்டை தொகுதிக்கு உட்பட்ட காட்டு எடையாரில் பிரசாரம் மேற்கொண்டு பேசிய விஜயகாந்த், “முதலமைச்சரானதும் முதல் கையெழுத்து மதுவிலக்குத்தான் என்று கூறி வந்த கருணாநிதி தற்போது விவசாயிகளின் கடனை ரத்து செய்வதுதான் எனது முதல் கையெழுத்து என முன்னுக்கு பின் முரணாக கூறி வருகிறார்.
 
இதற்கு காரணம் அவருக்கு வயதாகிவிட்டது. அவருக்கு வயதானாலும் பதவி ஆசை இன்னும் விடவில்லை. 6ஆவது முறையாக முதலமைச்சராக துடித்துக்கொண்டிருக்கிறார். கருணாநிதியும், ஜெயலலிதாவும் பொய் சொல்வதில் கில்லாடிகள். பொய் சொல்லியே மக்களை ஏமாற்றி வருகிறார்கள்.
 
நான் மதுவிலக்கு குறித்து, பல கட்ட போராட்டங்கள் நடத்திய போதும் வாயை திறக்காத ஜெயலலிதா, தற்போது படிப்படியாக மதுவிலக்கை அமல்படுத்துவதாக கூறி வருகிறார். தமிழ்நாட்டில் மதுவிலக்கு என்பது சாத்தியம் இல்லை என கூறி வந்த நத்தம் விஸ்வநாதன், தற்போது மதுவிலக்கு பற்றி பிரசாரம் செய்து வருகிறார்.
 
தற்போது தேர்தல் நெருங்கி வரும் நேரத்தில் தமிழகத்தில் பல இடங்களில் அடிக்கடி மின்சாரம் நிறுத்தப்படுகிறது. இதற்கான காரணம் எனக்கு நன்றாக தெரியும். இரவு நேரத்தில் மின்சாரத்தை நிறுத்தி விட்டு, அதிமுக, திமுக ஆகிய இரு கட்சியினரும் வாக்காளர்களுக்கு பணப் பட்டுவாடா செய்து வருகின்றனர். இதனை தடுக்க தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
 
நான் ஒவ்வொரு முறையும் தொகுதி மாறுவதாக பலர் பல கேள்விகளை எழுப்பி வருகின்றனர். நான் ஒன்றும் ஊழல் செய்து விட்டு தொகுதி மாறவில்லை.
 
என்னை பற்றி விருத்தாசலத்திலும், ரிஷிவந்தியத்திலும் கேட்டுப்பாருங்கள். நான் தொகுதி மக்களுக்காக மட்டுமே பாடுபட்டுள்ளேன். இந்த பகுதியில் சாலைகள் மோசமாக உள்ளது. நான் வெற்றி பெற்றவுடன் தரமான சாலை அமைத்து தருவேன். எனக்கு ஒரு வாய்ப்பு தாருங்கள்” என்று கூறியுள்ளார்.
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்....
அடுத்த கட்டுரையில்