இலங்கைக்கு உதவி: தமிழ்நாடு முதலமைச்சருக்கு ராஜபக்ஷ நன்றி

வெள்ளி, 6 மே 2022 (00:55 IST)
இலங்கை மக்களுக்கு உணவு, மருந்து உள்ளிட்டவற்றை அனுப்பி வைப்பதற்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு இலங்கை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நன்றி தெரிவித்துள்ளார்.
 
இலங்கையில் ஏற்பட்டுள்ள கடுமையான பொருளாதார நெருக்கடியால் அங்குள்ள மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அங்குள்ள மக்களுக்கு தமிழ்நாடு அரசு சார்பில் முதல்கட்டமாக 40 ஆயிரம் டன் அரிசி உள்ளிட்ட பொருட்கள் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன.
 
இந்நிலையில், இலங்கை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தமிழ்நாடு முதலமைச்சருக்கு எழுதியுள்ள கடிதத்தில், 'தமிழக சட்டப்பேரவையில் தாங்கள் கொண்டுவந்த தனித் தீர்மானத்தின்படி, இலங்கையில் தற்போது நிலவி வரும் கடும் பொருளாதார சூழ்நிலையில் கடும் சிரமத்திற்கு ஆளாகி உள்ள மக்களுக்கு, தமிழ்நாட்டிலிருந்து உணவு, அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் உயிர் காக்கும் மருந்துகள் அனுப்பி வைக்கப்படும் என்று தாங்கள் அறிவித்துள்ளமை, தங்களது நல்லெண்ணத்தைக் குறித்து நிற்கின்றது.
 
இலங்கைப் பொருளாதார நெருக்கடியை அண்டை நாட்டுப் பிரச்னையாகப் பார்க்காது, மனிதாபிமான அடிப்படையில் நோக்கும் தங்களிற்கும் தமிழ்நாடு மாநில அரசிற்கும் இலங்கை மக்கள் சார்பாக மிகுந்த நன்றியறிதலைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.' இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்