யுவராஜை கொல்ல முயற்சி - வி.சி. கட்சி பிரமுகர் உட்பட 2 பேர் கைது

Webdunia
வெள்ளி, 10 ஜூன் 2016 (16:16 IST)
கோகுல்ராஜ் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் யுவராஜை கொலை முயற்சி மேற்கொள்ள திட்டமிட்டதாக விடுதலை சிறுத்தைகள் கட்சி பிரமுகர் உட்பட 2 பேரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
 

 
கடந்த 2014ஆம் ஆண்டு ஜூலை மாதம் சேலம் மாவட்டம் ஓமலூரை சேர்ந்த என்ஜினீயர் கோகுல்ராஜ் நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அருகே ரெயில் தண்டவாளத்தில் படுகொலை செய்யப்பட்டு கிடந்தார். இந்த வழக்கை விசாரித்து வந்த டிஎஸ்பி விஷ்ணுபிரியாவும் தற்கொலை செய்து கொண்டார்.
 
இதனால், இரண்டு வழக்கையும் இணைத்து சிபிசிஐடி போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்குகளில் முக்கிய குற்றவாளியாகக் கருதப்படும், தீரன் சின்னமலை கவுண்டர் பேரவை தலைவர் யுவராஜை சிபிசிஐடி காவல் துறையினர் தீவிரமாகத் தேடிவந்தனர்
 
தேடப்பட்டு வந்த யுவராஜ் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 11ஆம் தேதி நாமக்கல் சிபிசிஐடி அலுவகத்தில் சரண் அடைந்தார். இதனால்,  நாமக்கல் நீதி மன்றத்தில் ஆஜர்படுத்தி, சிபிசிஐடி போலீலார் அவரிடம் விசாரணை நடத்தினர்.
 
பின்பு 19ஆம் தேதி, மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
 
யுவராஜுக்கு நிபந்தனை ஜாமீன் அளித்தது நீதிமன்றம்.  திருநெல்வேலி காவல் நிலையத்தில் தினமும் காலை, மாலை ஆஜராகி கையெழுத்திடவேண்டும் என்ற நிபந்தனையுடன் ஜாமீன் அளிக்கப்பட்டது.
 
இதனையடுத்து, சிறையிலிருந்து விடுதலையான யுவராஜ் நெல்லை நகர காவல் நிலையத்தில் தினமும் காலையும், மாலையும் ஆஜராகி யுவராஜ் கையெழுத்திட்டு வருகிறார். யுவராஜுக்கு ஏராளமான காவல் துறையினர் பலத்த பாதுகாப்பு அளித்து வருகின்றனர்.
 
இதனிடையே நெல்லையில் கையெழுத்திடும் யுவராஜுக்கு அச்சுறுத்தல் இருப்பதாக நெல்லை உளவுப்பிரிவு காவல் துறையினர்,  அரசுக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து யுவராஜூக்கு கூடுதல் பாதுகாப்பு அளிக்கப்பட்டது.
 
இந்நிலையில் யுவராஜை வெடிகுண்டு வீசி கொலை செய்ய சிலர் சதி திட்டம் தீட்டியிருப்பதாக நெல்லை மாநகர காவல் ஆணையர் திருஞானத்துக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதை தொடர்ந்து பாளை சப்-இன்ஸ்பெக்டர் விமலன் தலைமையில் சிறப்புப்படை அமைக்கப்பட்டு கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டது.
 
இந்த சதித்திட்டத்தின் பின்னணியில் நெல்லை மாநகர விடுதலை சிறுத்தைகள் கட்சி பொருளாளர் எம்.சி.சேகர், கீழப்பாட்டத்தை சேர்ந்த முத்துராஜ் ஆகியோர் இருப்பது தெரியவந்தது. இதை தொடர்ந்து தனிப்படையினர் இருவரையும் காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்
அடுத்த கட்டுரையில்