பள்ளி மாணவன் தலையில் கல்லைப் போட்டு கொலை! – அரியலூரில் அதிர்ச்சி!
திங்கள், 23 மே 2022 (10:43 IST)
அரியலூரில் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த பள்ளி மாணவன் மர்ம நபர்களால் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அரியலூர் மாவட்டம் பொற்பொதிந்தநல்லூர் கிராமத்தை சேர்ந்த மதியழகனின் மகன் மணிகண்டன். 16 வயதான மணிகண்டனின் தாய் இறந்துவிட்டதால் அவரது தந்தை மதியழகன் இரண்டாவது திருமணம் செய்து வாழ்ந்து வருகிறார்.
அரியலூரில் அரசு மாணவர் விடுதியில் தங்கி அங்குள்ள அரசு மேல்நிலை பள்ளியில் 11ம் வகுப்பு படித்து வரும் மணிகண்டன், விடுமுறை நாட்களில் தனது தாய்வழி தாத்தா, பாட்டி வீட்டிற்கு சென்று அங்கு தங்குவதை வழக்கமாக வைத்துள்ளார்.
நேற்று விடுமுறைக்கு பாட்டி வீட்டிற்கு சென்ற மணிகண்டன் வீட்டின் முன்பகுதியில் தூங்கியுள்ளார். அவரது தாத்தா பாட்டி அருகே உள்ள சிறிய வீட்டில் உறங்கியுள்ளனர். காலையில் வந்து பார்த்தபோது தலையில் கல்லால் தாக்கப்பட்டு மணிகண்டன் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்துள்ளார்.
இதையறிந்த போலீஸார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அரியலூரில் இருந்து சில மர்ம நபர்கள் இரவில் வந்து மணிகண்டனிடம் பேசிக் கொண்டிருந்ததாக தெரிய வந்துள்ளதால் அதுகுறித்தும் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.