கரூரில் நடந்த கூட்ட நெரிசல் சம்பவத்தை விசாரித்து அறிக்கை சமர்ப்பிக்க, பா.ஜ.க. எம்.பி.க்கள் அடங்கிய குழுவினர் இன்று கரூருக்கு சென்றனர். ஆனால், கோவையிலிருந்து கரூருக்கு சென்றபோது, அவர்கள் பயணித்த கார்கள் அடுத்தடுத்து மோதி விபத்துக்குள்ளானது.
இந்த குழுவுக்கு நடிகை மற்றும் எம்.பி.யான ஹேமமாலினி தலைமை தாங்குகிறார். அனுராக் தாகூர், தேஜஸ்வி சூர்யா, பிரஜ் லால் உட்பட எட்டு மூத்த எம்.பி.க்கள் இந்த குழுவில் இடம்பெற்றுள்ளனர். அவர்கள் இன்று காலை கோயம்புத்தூர் விமான நிலையத்திற்கு வந்தனர். அங்கிருந்து சாலை மார்க்கமாக கார்களில் கரூருக்கு புறப்பட்டனர்.
அவர்கள் சூலூர் அருகே சின்னியம்பாளையம் பகுதியில் சென்றுகொண்டிருந்தபோது, ஹேமமாலினி பயணித்த காரும், குழுவில் இருந்த மற்றொரு காரும் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் கார்கள் லேசாக சேதமடைந்தன. இருப்பினும், அதிர்ஷ்டவசமாக எம்.பி.க்கள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
விபத்திற்குப் பிறகு, அவர்கள் அதே கார்களில் கரூருக்கு புறப்பட்டு சென்றனர். அங்கு அவர்கள் சம்பவம் நடந்த இடத்தையும், பாதிக்கப்பட்டோரையும் சந்தித்து ஆய்வு செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.