ஜெ.வின் உடல் நிலை பற்றிய முழு தகவல் அறிக்கை : வெளியிடுகிறது அப்பல்லோ

திங்கள், 3 அக்டோபர் 2016 (16:56 IST)
தமிழக முதல்வர் ஜெயலலிதவின் உடல் நிலை பற்றிய கூடுதல் தகவல்கள் உடைய அறிக்கையை இன்று மாலை சென்னை அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் வெளியிட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.


 

 
கடந்த 22ம் தேதி, தமிழக முதல்வர் சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது, அவருக்கு காய்ச்சல் மற்றும் நீர்ச்சத்து குறைபாடு என்று மருத்துவமனை நிர்வாகம் முதல் அறிக்கையை வெளியிட்டது. 
 
அதன்பின், முதல்வர் நலமாக இருக்கிறார். வழக்கமான உணவுகளை எடுத்துக் கொள்கிறார் மற்றும் மருத்துவர்களின் கண்காணிப்பில் இருக்கிறார் என்று இரண்டாவது அறிக்கையில் கூறப்பட்டிருந்தது.
 
மூன்றாவது அறிக்கையில், இங்கிலாந்து மருத்துவர் ரிச்சர்ட் ஜான் பீலே மருத்துவமனைக்கு வந்துள்ளார். அவரின் ஆலோசனைகளை ஏற்று முதல்வருக்கு சிகிச்சை அளித்து வருகிறோம். அவர் உடலில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. முதல்வருக்கு நோய் தொற்று இருப்பதால், இன்னும் சில நாட்கள் அவர் மருத்துவமனையில் தங்கியிருந்து சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.
 
ஆனாலும் பல்வேறு வதந்திகள் காரணமாகவும், முதல்வர் என்ன நோயால் பாதிக்கப்பட்டுள்ளார் என்பது தெளிவாக கூறப்படாததாலும், அதிமுக விசுவாசிகள் மற்றும் பொதுமக்களிடையே முதல்வரின் உடல் நிலை குறித்து பல்வேறு குழப்பங்கள் நீடிக்கிறது. 
 
இந்நிலையில் அப்பல்லோ நிர்வாகம்  இன்று தனது அடுத்த அறிக்கையை வெளியிட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதில் முதல்வரின் உடல் நிலை குறித்த கூடுதல் தகவல்கள் இடம் பெறும் என்று மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

வெப்துனியாவைப் படிக்கவும்