முதல்வர் அறிவித்த புயல் நிவாரண நிதி மத்திய அரசு வழங்கியது: அண்ணாமலை
ஞாயிறு, 10 டிசம்பர் 2023 (10:58 IST)
புயல் நிவாரண நிதியாக தமிழக முதல்வர் ரூபாய் 6000 அறிவித்த நிலையில் அந்த நிதி மத்திய அரசு கொடுத்த பேரிடர் நிவாரண நிதி என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் கூறியதாவது:
திமுக ஆட்சிக்கு வந்ததும், அந்தஆண்டு டிசம்பரில் சென்னை மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டது. உடனடியாக சென்னை முழுவதும் மழைநீர் வடிகால் பணிகள் அமைக்கப் போகிறோம் என்று முதல்வர் ஸ்டாலின் கூறினார். கடந்த 2022-ம்ஆண்டு முழுவதும் பெரியஅளவிலான மழை ஏதும் இல்லாததால், சென்னையில் கடந்த ஆண்டு மழை நீர் பெரிய அளவிலான பாதிப்பை ஏற்படுத்தவில்லை. ஆனால், தாங்கள் செய்த மழைநீர் வடிகால் பணிகளால்தான், 2022-ம் ஆண்டு சென்னையில் மழைநீர் தேங்கவில்லை என்று திமுகவினர் பொய் கூறினார்கள்.
மேலும், கடந்த 2022-ம் ஆண்டு செப்டம்பர் மாதத்திலேயே 95 சதவீத வடிகால் பணிகள் முடிவடைந்து விட்டதாக கூறியிருந்தனர். தற்போது நவம்பர் மாதத்தில்98 சதவீத வடிகால் பணிகள் நிறைவுபெற்றுவிட்டன என அமைச்சர் கே.என்.நேரு கூறியிருந்தார். ஆனால், திமுகவினர் சொன்னது அனைத்தும் பொய் என்பதை மழை உணர்த்திவிட்டு சென்றிருக்கிறது.
இந்நிலையில், 98 சதவீத வடிகால் பணிகள் நிறைவு பெற்றுவிட்டன என கூறிய அமைச்சர் கே.என்.நேரு, தற்போது 42 சதவீத பணிகள்தான் நிறைவு பெற்றுள்ளதாக மாற்றி பேசுகிறார்.
மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண நிதியாக ரூ.10 ஆயிரம் வழங்க வேண்டும் என்று தமிழக பாஜக கோரிக்கை விடுத்திருந்தது. இந்நிலையில், வெறும் ரூ.6 ஆயிரம் மட்டுமேநிவாரண நிதியாக முதல்வர் அறிவித்துள்ளார். பேரிடர் நிவாரண நிதியாக பொதுமக்களுக்கு இழப்பீடாக ஒரு குடும்பத்துக்கு உடைகளுக்கு ரூ.2,500, உடமைகளுக்கு ரூ.2,500, மருத்துவ சிகிச்சைக்கு ரூ.5 ஆயிரம் வழங்கப்பட வேண்டும் என்று மத்திய அரசு கடந்த ஜூலை மாதம் தெரிவித்திருந்தது. இதன் அடிப்படையில்தான் ரூ.10 ஆயிரம் நிவாரண நிதி வழங்க வேண்டும் என்று வலியுறுத்தினோம்.
அனைத்து மாநிலங்களிலும் பேரிடர் காலங்களில் இழப்பீடாக இந்த தொகையை வழங்க வேண்டும் என்று மத்திய அரசு ஏற்கெனவே அறிவித்த நிலையில், திமுக அரசு தாங்கள் ஏதோ நிவாரண நிதியை தற்போது உயர்த்திருப்பதுபோல, தவறான தகவல் அளித்துள்ளனர். மத்திய அரசு வழங்கியுள்ள பேரிடர் மேலாண்மை நிதியை மட்டுமேபொதுமக்களுக்கு நிவாரணமாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்திருக்கிறாரே தவிர, மாநில அரசின் பங்கு என்று எதுவுமே இல்லை. இதில் தமிழக அரசின் பங்கு என்ன? தமிழக அரசு நிவாரண நிதியை ரூ.10 ஆயிரமாக உயர்த்தி வழங்க வேண்டும்.