அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வழக்கு எஃப்.ஐ.ஆர் கசிந்தது தொடர்பாக, தமிழக அரசுக்கு சுப்ரீம் கோர்ட் சரமாரியாக கேள்வி எழுப்பியுள்ளது. அதே நேரத்தில், சென்னை போலீஸ் கமிஷனர் மீது நடவடிக்கை எடுக்க சென்னை ஐகோர்ட் பிறப்பித்த உத்தரவுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த சூழ்நிலையில், எஃப்.ஐ.ஆர் லீக்கான காரணமாக, சென்னை போலீஸ் கமிஷனர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சென்னை ஐகோர்ட் உத்தரவு பிறப்பித்தது. இந்த உத்தரவை எதிர்த்து, தமிழக அரசின் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு இன்று விசாரணைக்கு வந்த போது, சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் சரமாரியாக கேள்விகள் எழுப்பினர். "பல்கலைக்கழகம் மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் எஃப்.ஐ.ஆர் இணையத்தில் வெளியிட்டது யார்? இதை தடுக்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது? எவ்வளவு நேரம் அது டவுன்லோடு செய்யும் நிலைமையில் இருந்தது? தற்போது மாணவியின் தகவல்கள் இணையத்தில் உள்ளதா?" என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
மேலும், மாணவிக்கு இழப்பீடாக ரூ.25 லட்சம் வழங்க வேண்டும் என்றும், இந்த தொகையை எஃப்.ஐ.ஆர் லீக்கானதற்கு காரணமானவர்களிடம் இருந்து வசூல் செய்ய வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இதில், மாணவி மீது பழி சுமத்தும் வகையில் உணர்ச்சி ஏற்ற முறையில் எஃப்.ஐ.ஆர் இருப்பதாகவும் கூறிய சுப்ரீம் கோர்ட், அதே நேரத்தில் சென்னை போலீஸ் கமிஷனர் மீது நடவடிக்கை எடுக்க ஐகோர்ட் பிறப்பித்த உத்தரவுக்கு தடை விதித்தது.