ஈரோடு தந்த செம்மல் பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரின் குருகுலத்தில் அரசியல் படம் கற்றுப் பின்னர் தமிழக அரசியலையே தன்னுடைய தனித்தன்மையான அறிவால் நிர்ணயித்தவர், சாதாரணக்குடியானவன் கூட திராவிட அரசியலுக்கு வர பிள்ளையார் சுழி போட்டவர்தான் அண்ணா
பெரியார் காட்டிய வழி என்றாலும் இதில், தன் ஆளுமையையும் தன்னிகரில்லாத உழைப்பையும் அறிவையும் தந்து இந்தியாவிலேயே மாநில சுயாட்சிக்கொள்கைக்கும், ஹிந்தி மொழி எதிர்ப்புக்கும், திராவிட நாடு கோரிக்கைகளையும் முன்வைத்து இந்தியாவையே தென்பக்கமாய் திரும்பி பார்க்க வைத்தவர் அண்ணா. அவர் பேரறிஞர் அண்ணா.
ஒவ்வொரு அரசியல் பொதுக்கூட்டத்தின் போதும் பேச்சாற்றல், எழுத்தாற்றல் மிக்கத் தன் தம்பிமார்களை பேசச் சொல்லிவிட்டு இறுதியாகப் பேசுவார் அண்ணார். வெண்கலக் கிண்ணத்துக்குள் சப்தஸ்வர மணிகளை ஜதி சொல்லி நடமாட விட்டது மாதிரி அண்ணாவின் வெண்கலக் குரலில் இருந்து கத்தை கத்தையாக தமிழ் வார்த்தைகள் அட்சரப்பிசுகின்றி நான் நீ என்று போட்டி போட்டுக்கொண்டு இசைநயம் ஆர்பரிக்க எதுகை மோனை சந்தம் கொஞ்சி ஏற்ற இறக்க பாவனையுடன் வரிசைகட்டி வந்து கேட்கின்ற மக்களை அறிவார்த்தமாய்ச் சொக்கவைக்குமாம்.இதில் தம்பிமார்களைவிட ஒரு படியாவதும் அதிகமாய்ப் பேசிவிடுவாராம்.