கொரோனாவை கட்டுப்படுத்த இன்று நாடு முழுவதும் மக்கள் சுய ஊரடங்கு உத்தரவை கடைப்பிடித்து வருகின்றனர். இன்று காலை 7 மணி முதல் மக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியேற வில்லை என்பதும், பேருந்துகள் ரயில்கள் உட்பட அனைத்து போக்குவரத்து நிறுத்தப்பட்டு உள்ளன என்பதும், பால் மற்றும் மருந்து பொருட்கள் கடைகள் தவிர அனைத்து கடைகளும் மூடப்பட்டுள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் கொரோனா முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கையாக இன்று ஒரு நாள் மட்டும் சுய ஊரடங்கு உத்தரவு போதாது என்றும், தமிழகத்தில் குறைந்தபட்சம் மூன்று வாரங்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று பாமக இளைஞரணித் தலைவரும் எம்பியுமான அன்புமணி ராமதாஸ் கேட்டுக்கொண்டுள்ளார்
இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது: தமிழகத்தில் கொரோனா வைரஸ் தாக்கம் குறித்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பாராட்டும் வகையில் உள்ளது. இருப்பினும் இத்தாலி, சீனா, அமெரிக்கா போன்ற நாடுகளில் இருந்து நாம் பாடம் கற்றுக்கொள்ள வேண்டும். சீனாவிலும் அமெரிக்காவிலும் ஊரடங்கு உத்தரவை மக்கள் மிகக் கடுமையாக பின்பற்றியதால் தான் பெருமளவு பாதிப்பு கட்டுப்படுத்தப்பட்டது. ஆனால் அதேநேரத்தில் மெத்தனமாக என்ற இத்தாலியில் பாதிப்பின் தீவிரம் அதிகமாக உள்ளது
சென்னை உள்பட தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக பொதுமக்கள் எந்தவித பதட்டமும் இல்லாமல் சாலையில் நடமாடுவதை பார்க்கும் போது அதிர்ச்சியாக உள்ளது. எனவே இன்று ஒரு நாள் மட்டும் சுய ஊரடங்கு உத்தரவுக்கு கட்டுப்பட்டு மக்கள் வெளியே வராமல் இருந்தால் போதாது, குறைந்தபட்சம் மூன்று வாரங்களுக்கு ஊரடங்கு உத்தரவை அரசு பிறப்பிக்க வேண்டும்
அரசு எவ்வளவுதான் நடவடிக்கை எடுத்தாலும் பொதுமக்களின் சுய கட்டுப்பாடு இல்லாமல் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க முடியாது. எனவே உடனடியாக ஊரடங்கு உத்தரவை உடனே அமல்படுத்தப்பட்டால் சீனாவை விட மோசமான விளைவை நாம் சந்திக்க நேரிடும் என்று அன்புமணி ராமதாஸ் எச்சரித்துள்ளார்.