24 மருத்துவ இடங்கள் யாருக்கும் பயனின்றி போனது: அன்புமணி எம்பி வருத்தம்!

Webdunia
வெள்ளி, 15 ஏப்ரல் 2022 (16:48 IST)
தமிழகத்திற்காக ஒதுக்கப்பட்ட அகில இந்திய தொகுப்புகளில் 24 இடங்கள் நிரப்பப்படவில்லை என்பதால் அந்த இடங்கள் யாருக்கும் பயன்படாமல் போனது என பாமக எம்பி அன்புமணி ராமதாஸ் தனது சமூக வலைத்தளத்தில் வருத்தத்தோடு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் பதிவு செய்திருப்பதாவது:
 
மருத்துவ மாணவர் சேர்க்கை நிறைவடைந்து விட்ட நிலையில், தமிழக அரசு மருத்துவக் கல்லூரிகளில் இருந்து அகில இந்திய தொகுப்புக்கு ஒதுக்கப்பட்ட 812 இடங்களில் 24 இடங்கள் நிரப்பப்படவில்லை. அந்த இடங்களை தமிழக அரசும் நிரப்ப முடியாது என்பதால் அவை யாருக்கும் பயன்படாது.
 
அரசு மருத்துவக் கல்லூரிகளில் ஒவ்வொரு மருத்துவ இடத்திற்கும் சுமார் ஒரு கோடி செலவிடப்படுகிறது. மருத்துவப் படிப்பில் சேர ஆயிரக்கணக்கான மாணவர்கள் காத்துக்கிடக்கின்றனர். இத்தகைய சூழலில் தவறான கொள்கைகளால் விலைமதிப்பற்ற 24 மருத்துவ இடங்கள் பயனற்றுக் கிடப்பதை ஏற்க முடியாது. அகில இந்திய தொகுப்புக்கு மாநிலங்கள் வழங்கும் இடங்களில் நிரப்பப்படாத இடங்கள் மீண்டும் மாநிலத்திற்கே திருப்பி அனுப்பப்படுவது தான் வழக்கமாக இருந்தது. நடப்பாண்டு முதல் அந்த இடங்கள் திரும்ப ஒப்படைக்கப்படக் கூடாது என உச்சநீதிமன்ற தீர்ப்பு தான் இந்த நிலைக்கு காரணமாகும்.
 
ஏற்கெனவே இருந்தவாறு அகில இந்திய தொகுப்பில் நிரப்பப்படாத இடங்கள் மீண்டும் மாநில அரசு கல்லூரிகளிடமே ஒப்படைக்கப்படுவதை அரசு உறுதி செய்ய வேண்டும். இல்லாவிட்டால் அகில இந்திய தொகுப்பை ரத்து செய்து விட்டு, அனைத்து இடங்களையும் மாநில அரசுகளே நிரப்ப அனுமதிக்க வேண்டும்
 
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்