’கமல்ஹாசன் அனைத்து விருதுகளையும் வெல்ல வேண்டும்’ : வாழ்த்தும் அன்புமணி
திங்கள், 22 ஆகஸ்ட் 2016 (20:26 IST)
கமல்ஹாசன் ஆஸ்கர் முதல் பாரதரத்னா வரை மீதமுள்ள அனைத்து விருதுகளையும் வென்று சாதனை படைக்க வாழ்த்துகிறேன் என்று பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி இராமதாஸ் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது குறித்து அன்புமணி வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், ”கலை மற்றும் இலக்கியத் துறையில் சிறப்பாக பங்களித்தவர்களுக்கு வழங்கப்படும் பிரான்ஸ் அரசின் உயரிய விருதுகளில் ஒன்றான செவாலியே விருது நடிகர் நண்பர் கமலஹாசனுக்கு வழங்கப்பட இருப்பதை அறிந்து மட்டற்ற மகிழ்ச்சியும், பெருமிதமும் அடைகிறேன். நண்பருக்கு எனது வாழ்த்துக்கள்.
பிரான்ஸ் நாட்டின் சார்பில், கலை மற்றும் இலக்கியத்துறை சாதனையாளர்களுக்கு வழங்கப்படும் விருதுகளில் மூன்றாம் நிலையில் உள்ளது செவாலியே விருதாகும். 1957ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட இவ்விருதை பெறும் இரண்டாவது தமிழ் கலைஞர் கமல்ஹாசன் என்பது குறிப்பிடத்தக்கது.
நடிப்புலகில் நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் வாரிசாக கருதப்படும் கமல்ஹாசன், சிவாஜிக்கு அடுத்தபடியாக இந்த விருதை பெற்றிருப்பது சிறப்பாகும். பிரான்ஸ் நாட்டில் செவாலியே விருது தோற்றுவிக்கப்பட்டதன் அறுபதாவது ஆண்டில், அந்த விருது நடிகர் கமலஹாசனுக்கு வழங்கப்படுவது கூடுதல் பெருமையாகும்.
உலகப்புகழ் பெற்ற விருதுகளில் ஒன்றான செவாலியே விருதை எந்த கலைஞர் வென்றாலும் அது வியப்புக்குரிய செய்தி தான். ஆனால், கமல்ஹாசன் இந்த விருதை வென்றதில் வியப்புக்கு இடமில்லை. நான்கு வயதில் களத்தூர் கண்ணம்மா திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடிக்கத் தொடங்கி, அந்த படத்திற்காக ஆறு வயதில் சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான குடியரசுத் தலைவரின் தங்கப் பதக்கத்தை வென்றவர் கமல்ஹாசன்.
3 முறை சிறந்த நடிகருக்கான தேசிய விருது, பிலிம்ஃபேர் விருதை 19 முறை வென்றதுடன், இனி தமக்கு அவ்விருது வழங்க வேண்டாம் என கூறிய பெருமை, ஆசிய அளவிலும், உலக அளவிலும் பல விருதுகள், இந்திய அரசின் பத்மஸ்ரீ, பத்ம பூஷன் விருதுகள், தமிழக அரசின் கலைமாமணி விருது, லிம்கா சாதனை புத்தகத்தில் இடம் என எண்ணற்ற பெருமைக்கு சொந்தக்காரரான கமலஹாசனுக்கு இது இன்னொரு விருது அவ்வளவு தான். இன்னும் கேட்டால் இந்த விருது இன்னும் ஒரு தசாப்தத்திற்கு முன்பே கமல்ஹாசனுக்கு வழங்கப்பட்டிருக்க வேண்டும்.
நடிப்பை பிழைப்பாக கருதாமல் மூச்சாக கருதும் நண்பர் கமலஹாசனுக்கு இன்னும் பல பெருமைகள் காத்திருக்கின்றன. சிறந்த மனித நேயரும், சமூக அக்கறையாளருமான கமல்ஹாசன் ஆஸ்கர் முதல் பாரதரத்னா வரை மீதமுள்ள அனைத்து விருதுகளையும் வென்று சாதனை படைக்க வாழ்த்துகிறேன் என கூறியுள்ளார்.