அமைச்சரை கலாய்த்த அமமுக நிர்வாகி கைது! – டிடிவி தினகரன் கண்டனம்!

திங்கள், 11 மே 2020 (11:28 IST)
சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரை கேலி செய்யும்படி பதிவிட்டதற்காக அமமுக நிர்வாகி கைது செய்யப்பட்டுள்ளதற்கு டிடிவி தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக தமிழகம் முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் உள்ளிட்டவற்றை தமிழக அரசு வழங்கி வருகிறது. இந்நிலையில் மக்களுக்கு வழங்கப்பட்ட அரிசி பையில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் படம் இடம்பெற்றிருந்ததாக சர்ச்சை எழுந்தது. இதுகுறித்து சமூக வலைதளங்களில் கிண்டலாக பல பதிவுகள் பரவிய நிலையில் அமமுக கட்சியின் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் முத்துக்குமார் என்பவரும் இதுகுறித்து கிண்டலாக பதிவிட்டுள்ளார். அதை தொடர்ந்து அவரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

இதுகுறித்து கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ள அமமுக பொது செயலாளர் டிடிவி தினகரன் “பொதுவெளியில் எல்லாராலும் பகிரப்பட்ட தகவலை தனது கணக்கில் பகிர்ந்ததற்காக முத்துக்குமாரை திடீரென கைது செய்திருப்பது கண்டனத்திற்குரியது. பல ஆயிரம் பேர் பகிர்ந்த ஒரு செய்திக்கு குறிப்பிட்டு அமமுகவை சேர்ந்த முத்துக்குமாரை கைது செய்வது, அரசுக்கு அமமுக மீது இருக்கும் காழ்ப்புணர்ச்சியை காட்டுவதாக உள்ளது” என்று கூறியுள்ளார்.

மேலும் ஆட்சியாளர்களின் ஆணவ போக்கிற்கு போலீஸார் இணங்கி செல்ல கூடாது என்றும், கைது செய்யப்பட்ட முத்துக்குமாரை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்றும் அவர் அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்