புதிய ஜி.எஸ்.டி. சீரமைப்பு நடவடிக்கைகளால், நடப்பு நிதியாண்டில் அரசுக்கு ரூ. 3,700 கோடி வருவாய் இழப்பு ஏற்படும் என்று பாரத ஸ்டேட் வங்கியின் ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது. எனினும், இந்த சீரமைப்பு, நுகர்வை அதிகரிப்பதன் மூலம் வருவாய் இழப்பை குறைக்க உதவும் என்றும் அந்த அறிக்கை கூறுகிறது. இந்த ஜி.எஸ்.டி. சீரமைப்பின் நிகர நிதி தாக்கம் ஆண்டுக்கு ரூ. 48,000 கோடியாக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
ஜி.எஸ்.டி. கவுன்சிலின் 56வது கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளின்படி, தற்போதுள்ள நான்கு அடுக்கு வரி அமைப்புக்கு பதிலாக, 5% மற்றும் 18% என்ற இரண்டு அடுக்கு அமைப்பு அமல்படுத்தப்பட்டுள்ளது. அத்தியாவசிய பொருட்கள் மீதான வரி விகிதங்கள் குறைக்கப்பட்டதால், சி.பி.ஐ. பணவீக்கம் நடப்பு நிதியாண்டில் 25 முதல் 30 அடிப்படைப் புள்ளிகள் வரை குறையக்கூடும் என்று அறிக்கை கணித்துள்ளது. மேலும், இந்த மாற்றங்கள் ஒட்டுமொத்த பணவீக்கத்தையும் 2026-27 நிதியாண்டில் 65 முதல் 75 அடிப்படைப் புள்ளிகள் வரை குறைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஆனால் அதே நேரத்தில் ஜி.எஸ்.டி. சீரமைப்புக்கு பிறகும் மாநிலங்கள் அதிக லாபம் பெறும் என்று எஸ்.பி.ஐ. ஆய்வு அறிக்கை தெரிவித்துள்ளது. மாநிலங்களுக்கு இந்த நிதியாண்டில் எஸ்.ஜி.எஸ்.டி. மூலம் ரூ. 10 லட்சம் கோடியும், மத்திய அரசின் பங்கிலிருந்து ரூ. 4.1 லட்சம் கோடியும் கிடைக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. ஒட்டுமொத்த ஜி.எஸ்.டி. வருவாயில் சுமார் 70% மாநிலங்களுக்கு கிடைக்கும் என்றும் அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.