அமித்ஷா சொல்வதே வேதவாக்கு.. கூட்டணி விவகாரத்தில் அவர் சொல்வது தான் இறுதி முடிவு: எல் முருகன்

Mahendran

சனி, 12 ஜூலை 2025 (14:30 IST)
அடுத்த ஆண்டு தமிழகத்தில் நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, அ.தி.மு.க. மற்றும் பா.ஜ.க. இடையேயான கூட்டணி பற்றிய நிலைப்பாடுகளில் தொடர்ந்து வேறுபாடுகள் நிலவி வருகின்றன. இந்நிலையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தேசிய ஜனநாயக கூட்டணி தமிழகத்தில் வெற்றி பெற்றால், பாஜக நிச்சயம் ஆட்சி பொறுப்பில் இடம்பெறும் என்று குறிப்பிட்டிருந்தார். இதற்கு முரணாக, அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, அதிமுக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் என தன் நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்தியிருந்தார்.
 
இந்த முரண்பட்ட கருத்துகள் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியபோது, மத்திய இணையமைச்சர் எல். முருகன் இவ்வாறு பதிலளித்தார்: "கூட்டணி அமைப்பது தொடர்பான அனைத்து முடிவுகளுக்கும் அமித் ஷா கூறுவதே இறுதி. அவரது வார்த்தைகளே எங்களுக்கு வேதவாக்கு, வேறு எந்த விளக்கமும் தேவையில்லை."
 
தி.மு.க. அரசை விமர்சிக்கும் வகையில்  எல். முருகன்,, "கோயில்களின் நிதிகள் அறப்பணிகளுக்கே பயன்படுத்தப்பட வேண்டும். இறை நம்பிக்கை இல்லாத அரசு கோயில்களின் நிர்வாகத்திலிருந்து விலகி இருக்க வேண்டும்" எனக் கூறினார்.
 
தி.மு.க. கூட்டணியின் வலிமை குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, "தி.மு.க. கூட்டணியில் இருப்பவர்கள் எப்போது வெளியேறுவோம் என பார்த்து கொண்டிருக்கிறார்கள். ஆனால், எங்கள் கூட்டணி வலுவாகவே உள்ளது. எங்கள் தேர்தல் பரப்புரைகள் வெற்றிகரமாக சென்று கொண்டிருக்கின்றன. தி.மு.க. கூட்டணி சிதறிப்போகும் நிலையில் உள்ளது. தி.மு.க. கூட்டணியில் உள்ளவர்கள் பலர் எங்கள் கூட்டணிக்கு வர ஆயத்தமாக உள்ளனர். இதன் மூலம் எங்கள் கூட்டணி மேலும் வலுவடையும்" என்று தனது நம்பிக்கையை வெளிப்படுத்தினார்.
 
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்