அம்பேத்கர் புத்தகம் வெளியிடும் விழா நேற்று சென்னையில் நடந்த நிலையில், இந்த விழாவிற்கு கூட வர முடியாத அளவுக்கு கூட்டணி அழுத்தத்தில் திருமாவளவன் இருக்கிறார் என்று விஜய் பேசியது தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
விகடன் நிறுவனம் வெளியிட்ட "எல்லாருக்குமான அம்பேத்கர்" என்ற புத்தக வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. இதில் விஜய் கலந்து கொண்டு புத்தகத்தை வெளியிட்டார்.
இந்த புத்தக விழாவில் பேசிய விஜய், இறுதியாக திருமாவளவன் குறித்து பேசியது தான் ஹைலைட் என்று கூறப்படுகிறது. விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன், இன்றைக்கு வர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவிற்கு கூட அவரால் கலந்து கொள்ள முடியாத அளவுக்கு கூட்டணி கட்சிகள் அழுத்தம் கொடுத்து இருக்கிறது என்பதை என்னால் யூகிக்க முடிகிறது.
ஆனாலும், அவருடைய மனது முழுக்க முழுக்க இன்று இந்த விழாவில் தான் இருக்கும் என்று அவர் கூறினார். விஜய்யின் இந்த பேச்சு பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், "விஜய் கூறுவதில் எனக்கு உடன்பாடு இல்லை" என்று திருமாவளவன் மறுப்பு தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.