பாஜகவுடன் மீண்டும் கூட்டணியா.? இபிஎஸ் சொன்ன அதிரடி பதில்..!

Senthil Velan

சனி, 8 ஜூன் 2024 (11:48 IST)
பாஜகவுடன் மீண்டும் கூட்டணி ஏற்பட வாய்ப்பு இல்லை என்றும் அண்ணாமலையை அடையாளம் காட்டியதே அதிமுகதான் என்றும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
 
நாடாளுமன்றத் தேர்தல் தோல்விக்கு பிறகு சேலத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், 2019 மக்களவைத் தேர்தலை விட, நடந்து முடிந்த தேர்தலில் அதிமுகவின் வாக்கு சதவீதம் அதிகரித்துள்ளதாக தெரிவித்தார். பல்வேறு விமர்சனங்களை தாண்டி அதிமுக கூட்டணி அதிக வாக்குகளை பெற்றுள்ளதாக குறிப்பிட்ட எடப்பாடி,  நடப்பு மக்களவைத் தேர்தலில் பாஜக கூட்டணி குறைந்த வாக்குகள் பெற்றுள்ளதாகவும் விமர்சித்தார் 
 
சூழலுக்கு ஏற்றவாறு கூட்டணி அமைப்பது தான் கட்சிகளின் நிலைப்பாடு என்றும் பாஜக கூட்டணி இருந்திருந்தால் வென்றிருப்போம் என நடந்து முடிந்ததை பற்றி பேசக்கூடாது என்றும் அவர் தெரிவித்தார். நடைபெற்ற தேர்தலில் திமுகவின் வாக்கு சதவீதம் குறைந்துள்ளது என்று அவர் கூறினார்.

ஆட்சி அதிகாரம்,  பண பலத்தை வைத்து பல கட்சிகள் பரப்புரையில் ஈடுபட்டதாகவும்,  தேர்தலில் வெற்றி தோல்வி என்பது எல்லாம் பின்னடைவாக எடுத்துக் கொள்ள முடியாது எனவும் எடப்பாடி குறிப்பிட்டார். மேலும் திமுக, அதிமுக இரண்டு கட்சிகளுமே மாறி மாறி  வீழ்ச்சியையும் வெற்றியையும்  சந்தித்துள்ளன என்று அவர் தெரிவித்தார்.
 
நாடாளுமன்றத் தேர்தல் என்பதால் மக்கள் வேறு விதமாக வாக்களித்துள்ளதாகவும், சட்டமன்றத் தேர்தல் வந்தால் எங்களுக்கு சாதகமாக மக்கள் வாக்களிப்பார்கள்  எனவும் அவர் நம்பிக்கை தெரிவித்தார். 

சசிகலா, ஓபிஎஸ் உள்ளிட்டோர் ஒருங்கிணையை அழைப்பு விடுத்தது குறித்த கேள்விக்கு பதில் அளித்த எடப்பாடி, எதிரிகளோடு சேர்ந்து குழப்பத்தை விளைவிக்க முயற்சி செய்வதாக சசிகலாவை மறைமுகமாக சாடினார்.
 
சேலம் நாடாளுமன்ற தொகுதியில் அதிமுகவுக்கு பின்னடைவு ஏற்படவில்லை என தெரிவித்த அவர், 2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணி பெரும்பான்மையோடு வென்று ஆட்சி அமைக்கும் என்று குறிப்பிட்டார்.
 
பாஜகவுடன் மீண்டும் கூட்டணி ஏற்பட வாய்ப்பு இல்லை என்று எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார். அண்ணாமலையின்  கனவு பலிக்காததால் விரக்தியில் கடுமையாக விமர்சித்து வருகிறார் என்றும் அண்ணாமலையை அடையாளம் காட்டியதே அதிமுகதான் என்றும் அவர் கூறினார்.

ALSO READ: மெரினாவில் வாகனங்களை இலவசமாக நிறுத்திக் கொள்ளலாம்..! மாநகராட்சி அதிரடி அறிவிப்பு..!!

கோவையில் கடந்த முறை பாஜக பெற்ற வாக்குகளை விட அண்ணாமலை குறைந்த வாக்குகள் பெற்றுள்ளதாக எடப்பாடி பழனிச்சாமி விமர்சித்தார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்