அஜித்குமார் மரண வழக்கில் சிபிஐ விசாரணையா? அமைச்சர் ரகுபதி விளக்கம்..!

Mahendran

செவ்வாய், 1 ஜூலை 2025 (15:17 IST)
சிவகங்கை வாலிபர் அஜித்குமார் காவல்துறை அதிகாரிகளால் அடித்துக் கொல்லப்பட்டதாக கூறப்படும் சம்பவம், தமிழ்நாட்டில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டும் என அ.தி.மு.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. ஆனால், சிபிஐ விசாரணை தேவையில்லை என அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.
 
இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசியபோது, "அஜித்குமார் மரண சம்பவத்தில் சிபிஐ விசாரணை தேவையில்லை. அண்ணா பல்கலைக்கழக விவகாரங்களிலும் சிபிஐ விசாரணை வேண்டும் என்று கூறினார்கள். ஆனால், நாங்கள் முறையான விசாரணை நடத்தி குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுக்கொடுத்தோம்.
 
அதேபோல், இந்த விவகாரத்திலும் உரிய விசாரணை நடத்தி, தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும். காவலர்கள் தவறு செய்திருந்தாலும், அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். மரணம் தொடர்பான புள்ளிவிவரங்களை தேர்தல் அறிக்கையாக நாங்கள் கொடுப்போம். யார் ஆட்சியில் லாக்-அப் மரணம் அதிகரித்தது என்பதை மக்கள் அறிவார்கள்" என்று அவர் தெரிவித்தார்.
 
மேலும், "தமிழக வெற்றி கழகத்தை ஒரு கட்சியாகவே நாங்கள் எடுத்துக் கொள்ளவில்லை. கட்சியாக எடுத்துக் கொண்ட பிறகு அவரது கருத்து குறித்து பேசலாம். அவரால் எங்கள் ஆட்சிக்கு எந்தப் பாதிப்பும் வராது" என்றும் அமைச்சர் ரகுபதி தெரிவித்தார்.
 
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்