சிவகங்கையில் அஜித்குமார் லாக்-அப் மரணம் தமிழ்நாட்டில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், "இவர்கள் காவல்துறை அதிகாரிகளா அல்லது காக்கி சட்டை போட்ட எமனா?" என்று நடிகர் தாடி பாலாஜி விமர்சனம் செய்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பாக அவர் தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள வீடியோ ஒன்றில், "இரண்டு நாட்களாக என் மனது ரொம்ப நெருடலாக இருக்கிறது. கோவில் பாதுகாவலராக இருந்த அஜித்குமார் எந்த தப்பும் செய்யவில்லை. தப்பு பண்ணி இருந்தால் நீங்கள் இந்தத் தண்டனை கொடுப்பது சரி.
கோவிலுக்கு வருபவர்கள் நன்றாக இருக்க வேண்டும் என்று வேண்டி கொள்வதற்காகத்தான் வருகிறார்கள். அந்த கோவிலுக்கு காரில் வந்தவர்களுக்கு பார்க்கிங் செய்ய தெரியவில்லை, இருந்தும் அந்த தம்பி நீங்கள் போய் சாமி கும்பிட்டு விட்டு வாருங்கள், நான் யாரையாவது வைத்து பார்க்கிங் செய்ய சொல்கிறேன் என்று சொல்லி இருக்கிறார்.
கோவில் சென்று வந்தவர்கள் வண்டியில் இந்த நகையை காணவில்லை என்று சொல்கிறார்கள். உடனே ஏன் அவர் புகார் கொடுக்கிறார்கள்? நான் என்ன கேட்கிறேன்? இவர் தப்பு செய்தாரா இல்லையா என்று தெரியாமல் ஒருத்தரை அடிப்பதற்கு காக்கிச்சட்டைக்கு என்ன உரிமை இருக்கிறது? அடிக்கும்போது அந்த வாலிபர் கத்தி உள்ளார். வலி இருக்காதா? சக மனிதனை போட்டு இந்த அடி அடிக்கிறீர்களே! நீங்க எல்லாம் மனுஷங்களா அல்லது காக்கி சட்டை போட்ட எமனுகளா? அறிவு வேண்டாம்!" என்று அவர் பதிவு செய்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.