பொள்ளாச்சியில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் பேசிய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, திமுக ஆட்சியில் நிறுத்தப்பட்ட அதிமுக திட்டங்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்தவுடன் தொடரும் என்று உறுதியளித்தார்.
கைத்தறி நெசவாளர்களுக்கு வீடு கட்டி தரும் திட்டத்தை திமுக அரசு நிறுத்திவிட்டதாக எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டினார். "அதிமுக ஆட்சிக்கு வந்தவுடன், காங்கிரீட் முறையில் பசுமை வீடுகள் கட்டித் தரப்படும்" என்று அவர் வாக்குறுதி அளித்தார். மேலும், நெசவாளர்களின் அனைத்து கோரிக்கைகளும் ஏற்கப்படும் என்றும், அதிமுக ஆட்சியில் நெசவாளர்களுக்கு வழங்கப்பட்ட ₹350 கோடி ரூபாய் மானியம் மீண்டும் வழங்கப்படும் என்றும் தெரிவித்தார்.
விவசாயிகள் நலனுக்கான திட்டங்களையும் அவர் பட்டியலிட்டார். "அதிமுக ஆட்சியில் கூட்டுறவு வங்கியில் விவசாயிகள் வாங்கிய கடன் தள்ளுபடி செய்யப்பட்டது. மேலும், விவசாயிகளுக்கு மும்முனை மின்சாரம் இலவசமாக வழங்கப்பட்டது" என்று அவர் குறிப்பிட்டார். இந்தத் திட்டங்கள் அனைத்தும் மீண்டும் கொண்டுவரப்படும் என்று அவர் உறுதிபட தெரிவித்தார்.