விஜய் கட்சியுடன் கூட்டணியா? என்ற கேள்வி.. ‘சொல்ல முடியாது’ என பதில் சொன்ன எடப்பாடி பழனிசாமி..!

Mahendran

வெள்ளி, 18 ஜூலை 2025 (11:18 IST)
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்துடன் கூட்டணி அமைப்பது குறித்த கேள்விக்கு, தேர்தல் யுக்திகள் மற்றும் வியூகங்களை வெளியே சொல்ல முடியாது என்று பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.
 
"மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்" என்ற பெயரில் கடந்த சில நாட்களாக சுற்றுப்பயணம் செய்து வரும் எடப்பாடி பழனிசாமி, ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு சமீபத்தில் பேட்டி அளித்தார். அப்போது, தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்யுடன் கூட்டணி தொடர்பாக பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறதா என்ற கேள்விக்கு, "தேர்தல் யுக்தி மற்றும் வியூகங்களை வெளியே சொல்ல முடியாது" என்று கூறினார்.
 
மேலும், "விஜய் ஒருவேளை கூட்டணிக்கு வந்தால், பாஜகவுடனான கூட்டணியை முறித்துவிட்டு தமிழக வெற்றிக் கழகத்துடன் கூட்டணி வைப்பீர்களா?" என்ற கேள்விக்கு, "யூகங்களுக்கெல்லாம் பதில் சொல்ல முடியாது" என்று அவர் தெரிவித்தார். அத்துடன், "பாஜகவையும் தமிழக வெற்றி கழகத்தையும் ஒப்பிட முடியாது என்றும், இரண்டு கட்சிகளுக்கும் வெவ்வேறு வகையான பலம் இருப்பதாகவும்" அவர் இன்னொரு கேள்விக்கு பதிலளித்தார். 
 
நாம் தமிழர் கட்சி, விடுதலைச் சிறுத்தைகள் மற்றும் இடதுசாரி கட்சிகளை கூட்டணி சேர்த்துக் கொள்வீர்களா என்ற கேள்விக்கு, "திமுக ஆட்சியை அகற்ற வேண்டும் என்ற எண்ணம் கொண்ட அனைத்து கட்சிகளையும் வரவேற்பதாக" அவர் தெரிவித்தார்.
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்