பிஹார் காங்கிரஸ் கட்சி, பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அவரது மறைந்த தாயார் ஹீராபென் மோடியை சித்தரிக்கும் ஏஐ (செயற்கை நுண்ணறிவு) வீடியோ ஒன்றை எக்ஸ் தளத்தில் வெளியிட்டு, பெரும் அரசியல் புயலை கிளப்பியுள்ளது. 36 வினாடிகள் கொண்ட இந்த வீடியோ, பிஹார் தேர்தலுக்கு முன் வேண்டுமென்றே தனிப்பட்ட முறையில் தாக்குதல் நடத்துவதாக பாஜக கடுமையாக விமர்சித்துள்ளது.
பிரதமர் நரேந்திர மோடியும் அவரது தாயாரும் பேசுவதுபோல கனவு போன்ற காட்சிகளுடன் உருவாக்கப்பட்ட இந்த வீடியோ ஏஐ தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்டதாக குறிப்பிட்டிருந்தாலும், இது குறித்து காங்கிரஸ் கட்சி எந்த விளக்கமும் அளிக்கவில்லை.
பிஹார் தேர்தல் களத்தில் அரசியல் களம் ஏற்கனவே சூடுபிடித்திருக்கும் நிலையில், இந்த வீடியோ வெளியாகி மேலும் பதற்றத்தை அதிகரித்துள்ளது. பிரதமர் மோடியின் தனிப்பட்ட வாழ்க்கையை பாதிக்கக்கூடிய வகையில், தேர்தல் நேரத்தில் இத்தகைய வீடியோவை வெளியிட்டதற்காக, பிஹார் காங்கிரஸ் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று பாஜக வலியுறுத்தியுள்ளது.
பிரதமர் மோடி மற்றும் அவரது தாயாரின் பெயர் அரசியலில் சர்ச்சைக்குரிய வகையில் இழுக்கப்படுவது இது முதல் முறையல்ல. ஆகஸ்ட் 27-ஆம் தேதி, காங்கிரஸும், ஆர்ஜேடியும் நடத்திய வாக்காளர் அதிகார் யாத்திரையின்போது, பிரதமர் மோடியையும், அவரது தாயாரையும் அவதூறாக பேசும் முழக்கங்கள் மேடையில் இருந்து எழுப்பப்பட்டதாக கூறப்படுகிறது.
தற்போது, புதிய ஏஐ வீடியோ வெளியான நிலையில், காங்கிரஸ் கட்சிக்கு கடும் கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டு வருகிறது.