ஓபிஎஸ், ஈபிஎஸ் அணிகள் இணைந்ததை அடுத்து தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் தற்போது போர்க்கொடி தூக்கியுள்ளதால் தமிழக அரசியலில் தற்போது பதற்றம் நிலவுகிறது.
பிரிந்து இருந்த ஓபிஎஸ் அணியினர் நேற்று அதிமுக தலைமை அலுவலகத்தில் ஒன்றாக இணைந்தனர். இதனையடுத்து ஓபிஎஸ் துணை முதல்வராக பதவியேற்றுக்கொண்டார். ஆளுநர் வித்தியாசாகர் ராவ் இதற்காக மும்பையிலிருந்து நேற்று சென்னை வந்தார்.
இதனையடுத்து தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் நேற்று இரவு ஜெயலலிதா சமாதியில் அமர்ந்து அரை மணி நேரம் தியானம் செய்தனர். இந்நிலையில் இன்று காலை ஆளுநரை தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் 19 பேர் சந்தித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மீது நம்பிக்கையை இழந்துவிட்டதாக கடிதம் கொடுத்தனர்.
19 பேர் ஆளுநரை பார்க்க சென்றாலும் தினகரன் ஆதரவு நிலைப்பாட்டில் 25-க்கும் மேல் எம்எல்ஏக்கள் இருப்பதாக கூறப்படுகிறது. இதனையடுத்து இவர்கள் அனைவரும் தினகரன் ஆலோசனைப்படி புதுச்சேரி செல்ல இருப்பதாகவும் அங்கு அவர்கள் ஒரு சொகுசு விடுதியில் தங்கவைக்கப்பட இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஏற்கனவே ஓபிஎஸ் போர்க்கொடி தூக்கியபோது அதிமுக எம்எல்ஏக்கள் சசிகலா தரப்பால் கூவத்தூர் சொகுசு விடுதியில் தங்க வைக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.