ஓ.பி.எஸ் அணிக்கு தாவும் அமைச்சர்கள்? - திட்டம் என்ன?

Webdunia
வெள்ளி, 3 மார்ச் 2017 (10:13 IST)
அதிமுக அமைச்சர்களை தங்கள் பக்கம் இழுக்கும் முயற்சியில் தமிழக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தின் அணி ஈடுபட்டிருப்பதாக தெரிகிறது.


 

 
சசிகலாவிற்கு எதிராக ஓ.பி.எஸ் களம் இறங்கிய பின் அவருக்கு ஆதரவாக 11 எம்.பிக்கள், 11 எம்.எல்.ஏக்கள் மற்றும் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் ஆகியோர் நின்றனர். ஆனால், 122 எம்.எல்.ஏக்களின் ஆதரவு இருந்ததால், சசிகலா ஆதரவு எடப்பாடி பழனிச்சாமி முதல்வரானார். 
 
ஓ.பி.எஸ்-ற்கு எதிராக வாக்களித்தாலும், அதிமுக எம்.எல்.ஏக்களில் பலர் ஓ.பி.எஸ் மீது மிகுந்த அன்பும், மரியாதையும் வைத்துள்ளனர். ஆனால், ஓ.பி.எஸ் அணி பலமாக இருந்தால் மட்டுமே,  ஆதரவு தெரிவிக்கும் சூழ்நிலையில் அவர்கள் இருக்கிறார்கள். மேலும், பல அமைச்சர்களும் ஓ.பி.எஸ் அணிக்கு வர தயாராக இருப்பதாக வாக்குறுதி அளித்துள்ளார்களாம்.
 
எனவே, சசிகலா தலைமைக்கு எதிரான மனநிலையில் உள்ள சில அமைச்சர்களை தங்கள் பக்கம் இழுக்க ஓ.பி.எஸ் அணி முயற்சி செய்து வருவதாக செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கிறது.  ஜெ.வின் மர்ம மரணம் குறித்து விசாரணை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, வருகிற 8ம் தேதி ஓ.பி.எஸ் அணியினர் உன்ணாவிரதப் போராட்டம் நடத்தவுள்ளனர். அதற்குள் சில அமைச்சர்கள் ஓ.பி.எஸ் பக்கம் வர வாய்ப்புள்ளதாக தெரிகிறது.
 
அதிமுக தற்போது, சசிகலாவால் நியமிக்கப்பட்ட டி.டி.வி. தினகரன் தலைமையில் இயங்கிக் கொண்டிருக்கிறது. அவரின் தலைமையை ஏராளமான நிர்வாகிகள் மற்றும் அமைச்சர்கள் விரும்பவில்லை எனத் தெரிகிறது. எனவே, அவர்கள் அனைவரையும் தங்கள் பக்கம் இழுக்கும் முயற்சியில் ஓ.பி.எஸ் அணி ஈடுபட்டுள்ளதாக தெரிகிறது.
அடுத்த கட்டுரையில்