தமிழக அரசு பள்ளி மாணவர்களுக்கு இடஒதுக்கீடு வழங்கப்பட்ட விவகாரத்தில் திமுகவின் முயற்சியே காரணம் என மு.க.ஸ்டாலின் கூறியுள்ளதற்கு அதிமுக அமைச்சர்கள் கடும் கண்டனங்கள் தெரிவித்து வருகின்றனர்.
அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்புகளில் 7.5 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்க தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் இன்னமும் ஆளுனரின் ஒப்புதல் பெறாமல் நிலுவையில் உள்ளது. இந்நிலையில் இந்த கல்வி ஆண்டிலேயே இட இதுக்கீட்டை அமல்படுத்த வேண்டும் என எதிர்க்கட்சிகள் தெரிவித்து வந்தன.
இதனால் தமிழக அரசு இந்த தீர்மானத்தை அரசாணையாக வெளியிட்டது. இந்நிலையில் ஆளுனர் தரப்பிலும் ஒப்புதல் அளிக்கப்பட்டது. இந்நிலையில் திமுக தொடர்ந்து போராடியதால் இந்த வெற்றி கிடைத்துள்ளதாக மு.க.ஸ்டாலின் அறிக்கை விடுத்துள்ளார்.
இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள அமைச்சர் ஜெயக்குமார் “அரசு பள்ளி மாணவர்களுக்கு அளிக்கப்பட்ட இட ஒதுக்கீட்டை ஸ்டாலினால் சொந்தம் கொண்டாட முடியாது. இதுகுறித்து அவர் சட்டமன்றத்தில் தனித்தீர்மானம் நிறைவேற்றினாரா?” என கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுகுறித்து பேசியுள்ள அமைச்சர் விஜயபாஸ்கர் “அரசு பள்ளி மாணவர்களுக்கான இட ஒதுக்கீடு முழுக்க முழுக்க அதிமுக அரசின் முயற்சியால் மட்டுமே பெறப்பட்டது” என கூறியுள்ளார்.