அதிமுக தலைமை அலுவலகம் பெயர் மாற்றம் : ஓபிஎஸ்-ஈபிஎஸ் அறிவிப்பு

Webdunia
வெள்ளி, 15 அக்டோபர் 2021 (13:01 IST)
அதிமுக தலைமை அலுவலகத்தின் பெயர் மாற்றப்பட்டதாக முன்னாள் முதல்வர்களான ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் அறிவித்துள்ளனர். அதிமுக தலைமை அலுவலகம் இனி ’எம்ஜிஆர் மாளிகை’ என அழைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து முன்னாள் முதல்வர்கள் ஈபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் இணைந்து வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
 
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொன் விழாவை கொண்டாட கழக உடன்பிறப்புகளும், கழகத்தின் மீது பேரன்பு கொண்ட அன்பர்களும் ஆவலுடன் காத்திருக்கும் இவ்வேளையில், பொன் விழா கொண்டாட்ட செயல்பாடுகள் குறித்து ஆலோசிக்க தலைமை கழக நிர்வாகிகள் பங்கேற்ற கூட்டம் தலைமை கழகத்தில் சிறப்புற நடைபெற்றது. “எங்கள் ஆட்சி என்றும் ஆளும் இந்த மண்ணிலே” என்ற புரட்சித்தலைவரின் பாடல் வரிகளே அவரது உடன்பிறப்புகளின் இதயத் துடிப்பாக ஒலித்துக்கொண்டிருக்கிறது.
 
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் தொடங்கப்பட்டது 50-வது ஆண்டுவிழாவை தமிழ்நாட்டிலும் கழக அமைப்புகள் செயல்பட்டு வரும் பிற மாநிலங்களிலும் பின்வரும் வகைகளில் ஆண்டு முழுவதும் கொண்டாட தீர்மானிக்கப்பட்டுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.
 
அதிமுக பொன்விழா ஆண்டை சிறப்பிக்கும் வகையில் பிரம்மாண்டமான மாநாட்டை நடத்துதல், பொன் விழாக் கொண்டாட்ட சிறப்பு இலட்சினை லோகோ வெளியிடுதல், பொன்விழா இலட்சினை பதிக்கப்பட்ட தங்க முலாம் பூசப்பட்ட பொன்விழா பதக்கங்களை கழக முன்னோடிகளுக்கு அணிவித்தல்; தந்தை பெரியார் பேரறிஞர் அண்ணா, புரட்சித்தலைவர் எம்ஜிஆர், புரட்சித்தலைவி அம்மா மற்றும் கழக ஒருங்கிணைப்பாளர் கழக இணை ஒருங்கிணைப்பாளர் ஆகியோரது படங்களுடன் கழகத்தின் பொன்விழா ஆண்டை குறிப்பிடும் வகையிலான லோகோவுடன் ஒரே மாதிரியான பதாகைகள் மற்றும் சுவரொட்டிகள் மாநிலம் முழுவதும் புதுப்பொலிவுடன் அமைத்தல்;
 
கழகத்தின் பொன்விழா ஆண்டை சிறப்பிக்கும் வகையில் கழகம் மற்றும் சார்பு அமைப்புகளின் சார்பில் ஆங்காங்கே சுவர் விளம்பரங்களும், இரட்டை இலை சின்னத்தை பிரதிபலிக்கும் வண்ண விளக்கு அலங்காரங்களும் அமைத்தல், கழகத்தின் வளர்ச்சிக்காக தொண்டாற்றும் எழுத்தாளர்கள், பேச்சாளர்கள், கவிஞர்கள், கலைத்துறையினருக்கு இந்த பொன்விழா ஆண்டு முதல் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, புரட்சித்தலைவர் எம்ஜிஆர், புரட்சித்தலைவி அம்மா ஆகியோரது பெயர்களில் விருதுகள் வழங்கி கவுரவிக்கப்படும்.
 
கழகத்தின் பொன்விழா ஆண்டை முன்னிட்டு பேச்சு போட்டி, கவிதைப் போட்டி, கட்டுரைப் போட்டி, விளையாட்டு போட்டி ஆகியவற்றில் மாநிலம் முழுவதும் நடத்திஅதில் வெற்றி பெறுபவர்களுக்கு கழகத்தின் சார்பில் நடத்தப்படும் பொன் விழா மாநாட்டில் சான்றிதழும் பரிசும் வழங்கி சிறப்பிக்கப்படும். தலைமைக் கழகத்திற்கு புரட்சித்தலைவர் எம்ஜிஆர் மாளிகை என பெயர் சூட்டப்படும்.
 
தலைமைக் கழக பேச்சாளர் மற்றும் கலைக் குழுவினரை கவுரவித்து உதவி செய்தல், கழகப் பொன்விழாவை பொது மக்களும் அறிந்துகொள்ளும் வகையில் காலச்சுருள் என்ற வரலாற்று நிகழ்வை கொண்ட விளம்பர படம் தயாரித்து தொலைக்காட்சிகளிலும், சமூக ஊடகங்களிலும் ஒளிபரப்பப்படும். ஜனநாயகத்திற்கு சாட்சி சொல்லும் திவ்ய தேசமான இந்தியாவில் அரை நூற்றாண்டுகளாக மக்களின் இதய சிம்மாசனத்தில் நிறையாசனமிட்டு அமர்ந்திருக்கும் இயக்கங்களில் ஒன்று தான் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்.
 
வாரிசு அரசியல் மதம் மற்றும் ஜாதி அரசியல் மனிதர்களை பிளவுபடுத்தும் பிற்போக்கு அரசியல் என்ற சிறுமை சிந்தனைகள் ஏதுமின்றி எல்லோருக்கும் எல்லாம் என தோற்றுவிக்கப்பட்ட அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் 49 ஆண்டுகளை கடந்து பொன்விழா காணும் வேளையில் 30 ஆண்டுகளுக்கு மேலாக தமிழ்நாட்டில் ஆட்சிப் பொறுப்பில் இருந்து செயற்கரிய சாதனை படைத்திருக்கிறது என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.” இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்