நேற்று, நடைபெற்ற பிகில் திரைப்பட இசை வெளியீட்டு விழாவில் பேசிய விஜய், பேனர் விழுந்து இறந்த சுபஸ்ரீயின் குடும்பத்துக்கு எனது ஆறுதல் தெரிவித்துக்கொள்கிறேன். இதுபோன்ற சமூக பிரச்சனைகளுக்காக ஹேஸ்டேக் போடவேண்டும். சமூக பிரச்சனையில் கவனம் செலுத்த வேண்டும் என கேட்டுக்கொண்டதுடன், சுபஸ்ரீ விவகாரத்தில் யாரைக் கைது செய்ய வேண்டுமோ அவர்களைக் கைது செய்யாமல், பேனர் பிரிண்ட் செய்தவர்களைக் கைது செய்துள்ளதாகப் பேசினார்.
இந்நிலையில், இன்று, ஒரு தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த அதிமுக பிரமுகர் வைகைச் செல்வன், பிகில் படத்தை ஓடச் செய்வதற்காகவே விஜய் அவ்வாறு மேடையில் பேசியதாகக் கூறினார்.
இதனைத் தொடர்ந்து, அமமுகவில் இருந்து விலகி, சமீபத்தில் திமுகவில் இணைந்து பதவி பெற்ற தங்க தமிச்செல்வனும் விஜய்யை பாராட்டி பேசியுள்ளார்.
அதில், 'சுபஸ்ரீயின் மரணத்துக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல், பேனர் பிரிண்ட்டிங் செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுத்தது குறித்து விஜய் பேசியது சரியானது. மாநில அரசின் தவற்றை சுட்டிக் காட்டி பேசிய விஜய்யின் துணிச்சலுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துகொள்கிறேன்' எனத் தெரிவித்துள்ளார்.
அதிமுகவுக்கு எதிராக விஜய் கருத்து தெரிவித்ததற்கு, திமுகவினர் ஆதரவு அளித்துவருவதால், விஜய்யின் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.