கர்நாடகாவில் இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணிந்து வர கல்லூரி நிர்வாகம் அனுமதி மறுத்த விவகாரத்தால், கர்நாடக மாநிலத்தில் நிலவும் பதற்றமான சூழல் அதிர்ச்சியளிக்கிறது. சமத்துவமும், நட்பும் தோன்ற ஆரம்பிக்கும் பள்ளி, கல்லூரிப் பருவத்தில், நாட்டின் மதச்சார்பின்மை கொள்கைகளை விதைக்க வேண்டிய தருணத்தில், மாணவ, மாணவியரிடையே மதத்தால் எழும் பிரிவினை கோஷங்கள் ஆரம்பத்திலேயே தூக்கியெறியப்பட வேண்டும்.
இந்திய அரசியலமைப்புச் சட்டம் வழங்கியுள்ள சமத்துவ உரிமையில் முக்கிய பகுதியான பிரிவு 15 மதம், இனம், சாதி, பால், பிறப்பு இவற்றின் அடிப்படையில் எவரையும் பாகுபாட்டுடன் நடத்தக்கூடாது என தெளிவாக குறிப்பிட்டிருக்கிறது. குடிமக்களின் மத உரிமையும், ஆன்மிக குணமும் மனித தன்மையுடன் செயல்படுவதில் இருக்கிறது. அரசியலமைப்பு வழங்கியுள்ள உரிமைக்கு எதிராக, எந்த மத உணர்வுகளையும் புண்படுத்துவது முற்றிலும் தவறு.
இந்திய திருநாட்டின் கலாச்சாரத்திற்கும், மாண்பிற்கும், பெண்கல்விக்கும் எதிரான குரல் எழுப்பி வருங்கால சமூகம் சீர்குலைவதை அரசு வேடிக்கை பார்க்காமல், மதவெறி செயலில் ஈடுபட தூண்டியவர்கள் யாராக இருந்தாலும், அவர்கள் மீது கர்நாடக அரசும், மத்திய அரசும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் சார்பில் வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறேன்"