டாக்டர் பட்டம் பெற்ற பிரபல காமெடி நடிகர்!

செவ்வாய், 22 அக்டோபர் 2019 (21:50 IST)
சினிமாவில் வாய்ப்பு கிடைக்காமல் மார்க்கெட்டை இழந்துவிட்டால் ஏதாவது ஒரு கட்சியில் இணைந்து வெறுப்பு அரசியல் செய்து வருபவர்கள் மத்தியில் காமெடி நடிகர் சார்லி, தமிழ் திரைப்படங்களில் நகைச்சுவை என்ற பெயரில் ஆய்வு செய்து தற்போது டாக்டர் பட்டம் பெற்றுள்ளார்.
 
இயக்குனர் சிகரம் கே. பாலசந்தர் இயக்கிய பொய்க்கால் குதிரை என்ற திரைப்படம் மூலம்  நகைச்சுவை நடிகராக அறிமுகமான நடிகர் சார்லி நகைச்சுவை கேரக்டர்களில் மட்டுமின்றி குணச்சித்திர வேடங்களிலும் நடித்தார். சமீபத்தில் இவர் விவேக்குடன் நடித்த வெள்ளைப்பூக்கள் என்ற படம் நல்ல வரவேற்பை பெற்றது
 
59 வயதாகும் சார்லி வாய்ப்பு கிடைக்காத ஓய்வு நேரத்தை பயனுள்ள வகையில் கழிக்க ‘தமிழ் திரைப்படத்தில் நகைச்சுவை’ என்ற தலைப்பில் டாக்டர் பட்டத்திற்காக ஆய்வு செய்தார். இந்த ஆய்வு அறிக்கையின்படி தற்போது இவருக்கு தஞ்சை தமிழ் பல்கலைக்கழகம் டாக்டர் பட்டத்தை அளித்துள்ளது
 
இன்று நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்,  அமைச்சர் பாண்டியராஜன், பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் கோ. பாலசுப்பிரமணியன், பல்கலைக்கழக ஆட்சிக்குழு உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் சார்லிக்கு டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது.
 
ஏற்கனவே கடந்த 2013 ஆம் ஆண்டு தமிழ் திரைப்பட வளர்ச்சிக்கு நகைச்சுவை நடிகர்களின் பங்களிப்பு என்ற தலைப்பில் அழகப்பா பல்கலைகழகத்தில் சார்லி எம்.பில் பட்டம் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்