இருமல் மருந்து நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்க முடியாது! ஆனால்? - அமைச்சர் மா.சுப்பிரமணியன்!

Prasanth K

செவ்வாய், 7 அக்டோபர் 2025 (08:37 IST)

காஞ்சிபுரத்தில் தயாரிக்கப்படும் இருமல் மருந்து சாப்பிட்டு குழந்தைகள் பலியான விவகாரம் குறித்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம் அளித்துள்ளார்.

 

காஞ்சிபுரத்தில் தயார் செய்யப்பட்டு இந்தியா முழுவதும் பல மாநிலங்களுக்கு விநியோகிக்கப்படும் கோல்ட்ரிப் இருமல் மருந்தை சாப்பிட்ட வெளிமாநில குழந்தைகள் பலியான சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதை தொடர்ந்து அந்த இருமல் மருந்து நிறுவனத்தில் மாதிரிகள் பெறப்பட்டு சோதிக்கப்பட்டதில் குறிப்பிட்ட பேட்ச் எண் மருந்துகளில் ஆபத்து உள்ளது கண்டறியப்பட்டு, இதுகுறித்து அனைத்து மாநிலங்களுக்கும் எச்சரிக்கை செய்யப்பட்டுள்ளது.

 

இந்நிலையில் அந்த மருந்து நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா என்ற செய்தியாளர்கள் கேள்விக்கு பதிலளித்த மக்கள் நலவாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் “எங்களால் அந்த நிறுவனத்திற்கு தடை விதிக்க முடியாது. ஆனால் அந்த மருந்தை வாங்க வேண்டாம் என தமிழகத்தில் தடை விதித்திருக்கிறோம்” என கூறியுள்ளார்.

 

மேலும் தமிழ்நாடு முழுவதும் மலை மற்றும் கிராம பகுதிகளில் பாம்பு கடி, நாய்க்கடிக்கான மருந்துகள் தயார் நிலையில் உள்ளதாகவும், மழைக்காலம் நெருங்கியுள்ள நிலையில் டெங்கு காய்ச்சல் ஏற்படாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் கூறியுள்ளார்.

 

Edit by Prasanth.K

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்