சமீபத்தில் ஈரோடு கிழக்கு தொகுதிக்கான இடைத்தேர்தல் நடைபெற்றது. இதற்காக பல கட்சிகளும் போட்டியிட்ட நிலையில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மேனகாவை ஆதரித்து பிரச்சாரத்தில் ஈடுபட்ட அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் அருந்ததியர் மக்கள் குறித்து பேசிய கருத்துகள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தின. இதனை தொடர்ந்து சீமானை கண்டித்து பல்வேறு அமைப்புகள் பல பகுதிகளில் போராட்டத்தில் ஈடுபட்டன. ஆனால் இதுகுறித்து பேசிய சீமான் தான் வரலாற்று சம்பவங்களையே சொன்னதாகவும், தான் அருந்ததியர் சமூக மக்களை இழிவுபடுத்தவில்லை என்றும் கூறியிருந்தார்.
இந்நிலையில் இன்று ஆதித்தமிழர் கட்சியினர் சீமான் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். சென்னை போரூரில் உள்ள நாம் தமிழர் கட்சி அலுவலகம் முன்பு போராட்டம் நடத்திய அவர்கள் கட்சி அலுவலகம் மீது கற்கள், பாட்டில்களை வீசி தாக்கியதால் பரபரப்பு எழுந்துள்ளது. அங்கு பாதுகாப்பு பணியில் போலீஸார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.